சனி, 24 ஏப்ரல், 2010

இதுவே மெய்யான சத்தியம் 5. மனந்திரும்புதலைப் பற்றிய மெய்யான சத்தியம்

நமக்கு வரவேண்டிய பாவதண்டனையை அவர் தன்மீது ஏற்றுக்கொண்டார். ஆனால் நாம் தேவனிடமிருந்து இந்தப் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ளாதவரை நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அதன் தண்டனையிலிருந்து விடுதலையாக முடியாது!

இவ்வாறு கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாய் தேவன் உங்களுக்காக சம்பாதித்ததை நீங்கள் பெறவேண்டுமென்றால், நீங்கள் முதலாவது உங்கள் பாவங்களை விட்டு மனந்திரும்ப வேண்டும். இதன் உண்மையான பொருள் யாதெனில், நீங்கள் அறிந்திருக்கிற ஒவ்வொரு பாவத்தையும் விட்டுத் திரும்புவதற்கு மெய்யான விருப்பம் கொள்வதேயாகும்.

உங்கள் தீய பழக்கங்களை விட்டுவிடுவதற்குரிய பெலன் உங்களிடம் இல்லாமல் இருக்கலாம். இந்த இடத்திலும் தேவன் உங்கள் பெலவீனத்தை நன்கு அறிந்திருக்கிறார். அதற்குரிய பெலன் உங்களுக்கு இருக்கும் என அவர் எதிர்பார்ப்பதில்லை. அவர் உங்களிடம் எதிர்பார்ப்பதில்லை. அவர் உங்களிடம் எதிர்பார்த்து கேட்பதெல்லாம், "இப்பழக்கங்களையெல்லாம் விட்டுவிடுவதற்கு உனக்கு மனதுண்டோ?" என்ற கேள்வி மாத்திரமே. நீங்கள் மெய்யாகவே ஒவ்வொரு பாவ வழிகளையும் விட்டுவிடுவதற்கு விரும்புவதை தேவன் காணும்போது, நீங்கள் எவ்வளவுதான் எண்ணற்ற தீய பழக்கங்களால் இன்றுவரை தோல்வி அடைந்தவர்களாய் இருந்தாலும், நீங்கள் இருக்கிற வண்ணமாகவே உங்களை அவர் ஏற்றுக்கொள்வார்!!

இது எத்தனை ஆச்சரியமான நற்செய்தி என்பதை எண்ணிப்பாருங்கள்!

நீங்கள் மெய்யாகவே உங்கள் பாவ வழிகளை விட்டுவிடுவதற்கு ஆயத்தமாய் இருக்கிறீர்களா என்பதற்கு, நீங்கள் கடந்த காலத்தில் செய்த தவறுகளை ஒப்புரவாகி சரிசெய்திட விரும்பும் "விருப்பமே" தெளிவான நிரூபணமாகும்.

உதாரணமாய், யாரிடமிருந்தாவது நீங்கள் பணத்தைத் திருடியிருந்தால், அப்பணத்திற்குரிய தொகையை நீங்கள் சேர்த்தவுடன் அதை உடனே திரும்பச் செலுத்துவதற்கு விருப்பம் கொண்டவர்களாய் இருக்க வேண்டும்! நீங்கள் யாரையாவது உங்கள் வார்த்தையினால் மனம் புண்படச்செய்து, அது இப்போது உங்கள் "நினைவிற்கு வந்தால்" நீங்கள் பேசிய வார்த்தைக்காக அவரிடம் நேரடியாகச் சென்றோ அல்லது கடிதம் எழுதியோ மன்னிப்பு கேட்பதற்கு விருப்பம் கொண்டவர்களாய் இருக்க வேண்டும்! இதுப்போன்ற செயல்களின் மூலமாகவே தேவன் நம்முடைய உண்மையையும், தாழ்மையையும் சோதித்து அறிகிறார்.

உண்மையான மனந்திரும்புதலை, "விக்கிரகங்களை விட்டு தேவனிடதிற்கு மனந்திரும்புதல் எனப்பரிசுத்த வேதாகமம் அழைக்கிறது.
சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றை சிருஷ்டிகருக்கு மேலாய் உயர்த்துவதே விக்கரக ஆராதனையாகும். அது பணமோ அல்லது அழகான ஸ்திரீயோ அல்லது நம்முடைய பேர் புகழோ ஆகிய எதுவாகவும் இருக்கலாம்.

மரத்தினாலோ அல்லது கல்லினாலோ அல்லது உலோகத்தினாலோ செய்யப்பட்டவைகளும் விக்கிரகங்களே ஆகும். இவ்வாறு மனிதன் சிருஷ்டித்த ஒன்று, அவர்கள் ஆராதிக்கும் தேவனாய் மாறுகிறது! அண்டசராசரத்தையும் சிருஷ்டித்த சிருஷ்டிகரை ஒரு தொலை நோக்கு சாயலாகக்கூட எந்த மனிதனும் தன் கரங்களால் வடிவமைத்திட முடியாது!

எனவே மனந்திரும்புதல், எத்தகைய விக்கிரக ஆராதனையிலிருந்தும் திரும்புவதை உள்ளடக்கியதாய் இருக்கிறது. உண்மையான மனந்திரும்புதல், சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றையும் விட்டு விட்டு தேவனிடத்தில் திரும்பி, "சர்வ வல்லமையுள்ள தேவனே! நீர் ஒருவரே தொழுகைக்கும் ஆராதனைக்கும் பாத்திரர். இந்நாள்வரை, சிருஷ்டிக்கப்பட்டவைகளை நான் தொழுது கொண்டதற்காக மிகவும் வருத்தம் அடைகிறேன்.

இன்றிலிருந்து என் வாழ்வில் நீர் மாத்திரமே எனக்கு எல்லாவற்றிலும் மேலானவர்" என நாம் கூறுவதாய் இருக்கவேண்டும்!

மனந்திரும்ப வேண்டும் என்பதற்காக, நம்முடைய வேலைகளை அல்லது குடும்பத்தை விட்டு ஏதாகிலும் காடு அல்லது மலைக்குச் சென்று சந்நியாசியாக மாறவேண்டும் என்பது பொருளாகாது. அப்படி இல்லவே இல்லை! நாம் யாவரும் நம்முடைய பிழைப்பிற்காக சம்பாதிக்கவும், குடும்பங்களை உடையவர்களாய் இருக்கவுமே தேவன் விரும்புகிறார்! பணம் சம்பாதிப்பது ஒரு பாவமல்ல. ஆனால் தேவனைக் காட்டிலும் பணத்தை அதிகமாய் நேசிப்பதே பாவமாகும்!

திருமண கட்டுக்கோப்பிற்குப் புறம்பே கொள்ளும் எவ்வித பாலிய உறவுகளும் பாவமே ஆகும். ஆகவே, நம்முடைய எல்லா பாலியத்தின் பாவங்களுக்காக மனந்திரும்பவும், அதைவிட்டு விட்டு தேவனிடம் உண்மையான மனதோடு ஒப்புரவாக வேண்டியதும் மிக அவசியமாக இருக்கிறது!

நாம் மனந்திரும்பி விட்டுவிட வேண்டிய மற்றொரு பாவம்யாதெனில், பிறரை மன்னிக்க முடியாதசுபாவமே ஆகும். தேவன் உங்களுடைய எல்லா பாவங்களையும் மன்னிப்பதற்கு நீங்கள் விரும்பினால், உங்களுக்கு ஏதாகிலும் ஒரு வகையில் தீங்கு செய்த யாராயிருந்தாலும் அவர்களை நீங்களும் மன்னிப்பதற்கு விருப்பம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். தேவன் உங்களுக்கு எவைகளைச் செய்தாரோ அவைகளை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யவேண்டும். இவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் தேவனும் உங்களை மன்னித்திட மாட்டார்!

ஆண்டவராகிய இயேசு கூறுகையில், "மனுஶருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்" என உறுதியாகக் கூறினார்.

எவ்வளவு பெரிய அல்லது கொடிய பாவமாயிருந்தாலும் எல்லாப் பாவங்களையும் தேவன் மன்னித்திடமுடியும். ஆனால் நாம் மாத்திரம் அவைகளிலிருந்து மனந்திரும்பியிருக்க வேண்டும்!

அடுத்த அத்தியாயம்

இந்த கட்டுரை சகரியா பூணன் எழுதிய "THE REAL TRUTH" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்

www.cfcindia.com/tamil/

கருத்துகள் இல்லை: