சனி, 24 ஏப்ரல், 2010

இதுவே மெய்யான சத்தியம் 4.மன்னிப்பைப் பற்றிய மெய்யான சத்தியம்

நம்முடைய பாவங்களை தேவன் எவ்வாறு மன்னித்திட முடியும்?

தேவன் நீதிபரராயிருக்கிறபடியால், ஒரு மனிதனை மன்னிப்பதற்கு அவனுடைய பாவங்களைக் கண்டும் காணாததுபோல் இருந்துவிட அவரால் முடியாது! பாவம் எவ்வகையிலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். ஆனால் அவர் அன்புள்ள தேவனாயும் இருக்கின்றபடியால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கென ஓர் வழியை உண்டுபண்ணி வைத்திருக்கிறார்!!

எல்லா மதங்களுமே நாம் நல்லவர்களாயும், அன்புள்ளவர்களாயும், உண்மையுள்ளவர்களாயும் இருக்கும் படி போதிக்கின்றன. ஆனால் "அவை அனைத்தும்" நம்முடைய பாவங்களுக்குரிய மன்னிப்பைப் பெற்ற பிறகு நாம் வாழும் வாழ்க்கையே ஆகும்.

தேவன் நம்முடைய பாவங்களை மன்னிக்கவேண்டுமென்றால், அதற்கென அவர் ஏதாகிலும் செய்யவேண்டியதாய் இருந்தது. உலகத்தை சிருஷ்டிக்கும்போது தேவன் ஒரே ஒரு வார்த்தை மாத்திரம் பேசினார், உடனே உலகம் தோன்றியது! ஆனால் ஒரே ஒரு வார்த்தை மாத்திரம் பேசி நம்முடைய பாவங்களை மன்னித்திட அவரால் முடியவில்லை!!

ஆம், தேவன் நம்மைப் போன்ற மனிதனாக வேண்டியதிருந்தது. நாம் மானிடர்களாய் சந்திக்கும் சோதனைகளுக்கும் பாடுகளுக்கும் ஊடாய்ச் சென்று அவர் வாழ வேண்டியதிருந்தது. மேலும், நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை தன் மீது சுமந்து நம்முடைய இடத்தில் ஓர் பலியாக அவர் மரிக்க வேண்டியதிருந்தது!!

நம்முடைய பாவங்களுக்கான தண்டனை, துன்பமோ அல்லது வியாதியோ அல்லது வறுமையோ அல்லது இவ்வுலகத்தில் வந்து தாழ்ந்த சமுதாயத்தில் பிறப்பதோ அல்லது இதுபோன்ற வேறெதுவுமோ இல்லை! நித்திய மரணமே அத்தண்டனை ஆகும்!! இந்த மரணம் தேவனை விட்டு நிரந்தரமாய் பிரிந்திருப்பதற்கு ஒப்பாகும். சரீர மரணத்தின் மூலம் நம் சரீரத்தைவிட்டு நாம் பிரிவதைப் போலவே, ஆவிகுரிய மரணத்தின் மூலம் சர்வ ஜீவனுக்கும் ஊற்றாகிய தேவனைவிட்டு பிரிவதாயிருக்கிறது!

இனிவரும் எதிர்காலத்தில் நீங்கள் செய்திடப்போகும் நற்கிரியைகள், கடந்த காலத்தில் நீங்கள் செய்த தீமைகளை ஒருபோதும் நிவர்த்தி செய்யவே முடியாது! நாம் எப்படியாவது தேவனுடைய சமூகத்தை அடைவதற்கு ஒரு வழிகூட இல்லை. ஆம், நாம் ஓர் நம்பிக்கையற்ற இழப்பையே அடைந்துவிட்டோம்!

ஆனால் தேவன் தம்முடைய மிகுந்த அன்பினிமித்தம் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு ஓர் வழியை உண்டுபண்ணி வைத்திருக்கிறார்.

பாவத்திற்காய் நித்திய தண்டனை அடைவதிலிருந்து மனுவர்க்கத்தை இரட்சிப்பதற்காக பிதாவாகிய தேவன், இயற்கைக்கு அப்பாற்பட்ட பரிசுத்தாவியின் வல்லமையினால், ஒரு கன்னியின் மூலமாய் தன்னுடைய குமாரன் ஒரு பாலகனாய் பிறக்கும்படி, சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு இவ்வுலகிற்கு அனுப்பினார். அவருக்கு இயேசுகிறிஸ்து எனப் பெயர் தரப்பட்டது. இவர் மானிடர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையினாலும் சோதிக்கப்பட்டு, தன் பிள்ளைப் பருவத்திலிருந்து புருஷ பருவத்திலிருந்து வளர்ச்சியடைந்தார். அவர் சந்தித்த எல்லா சோதனைகளிலும் வெற்றி சிறந்தார்! ஆம், அவர் ஒரு போதும் பாவம் செய்யவே இல்லை!!

தன் குமாரனகிய இயேசுகிறிஸ்து 33 1/2 -வயதாய் இருக்கையில் பொல்லாத மனிதர்களால் பிடிக்கப்பட்டு ஒரு சிலுவையில் அறையப்படுவதற்கு பிதாவாகிய தேவன் அனுமதித்தார். அந்த சிலுவையின்மேல் அவர் நமக்காக சாபமாகி, மானிடர்களின் பாவ தண்டனையைத் தன்மீது ஏற்றுக்கொண்டார். இங்குதான் தேவனுடைய ஒப்பற்ற அன்பை நாம் காண்கிறோம்!

இயேசுகிறிஸ்து தம்முடைய இரத்ததை சிந்தி சிலுவையில் மரித்தபோது, நம்முடைய பாவங்களுக்கான நீதியின் தண்டத்தொகை முழுவதுமாய் செலுத்தப்பட்டுவிட்டது. ஆம், நீதியின் தேவை சரிக்கட்டப்பட்டு விட்டது!

சிலுவையில் இயேசுகிறிஸ்து புரிந்த தியாகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை இவ்வுலகிற்கு நிரூபிப்பதற்காக அவர் அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாளில் தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.

ஒரே ஒரு தேவன்தான் இருக்கிறார் என்பதும், இந்தப் பூமியில் தேவனுடைய ஒரே ஒரு மானிட அவதாரம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துதான் என்பதும் இரண்டு உண்மைகளால் நிரூபணமாகிறது.

1.உலகத்தின் பாவங்களுக்காக மரித்த ஒரே ஒருவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மாத்திரமே!

2.மரணத்திற்கு பின்பு மீண்டும் உயிருடன் எழுந்து இனி ஒரு போதும் மரிக்காதவராய் இருக்கும் ஒரே ஒருவர், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மாத்திரமே! இதன் மூலமாய், அவர் மனிதனின் மிகப்பெரிய எதிரியாகிய மரணத்தை ஜெயித்துவிட்டார் என்பதை நிரூபித்தார்!!

உயிர்த்தெழுந்து, இப்பூமியில் 40 நாட்களுக்குப்பிறகு, இன்று அவர் இருக்கும் பரலோகத்திற்கு இயேசு திரும்பச் சென்றார். அவ்வாறு திரும்பிச்செல்லும்போது, இவ்வுலகத்தை நியாயம் தீர்த்து அதை நீதியாலும் சமாதானத்தாலும் ஆளுகை செய்வதற்கு ஒருநாளில் மீண்டும் திரும்ப வருவேன் எனவும் வாக்குரைத்தார்.

அவர் இந்த பூமிக்கு வருவதற்கு முன்பாக, தேவன் இயேசு கிறிஸ்துவுக்குள்ளாய் வழங்கும் பாவமன்னிப்பை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டியது எத்தனை அவசியமாய் இருக்கிறது!!

அடுத்த அத்தியாயம்

இந்த கட்டுரை சகரியா பூணன் எழுதிய "THE REAL TRUTH" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்

www.cfcindia.com/tamil/

கருத்துகள் இல்லை: