சனி, 24 ஏப்ரல், 2010

இதுவே மெய்யான சத்தியம் 1. தீமையைப்பற்றிய மெய்யான சத்தியம்

சகல ஞானத்தினாலும் நன்மையினாலும் நிறைந்த தேவன் சிருஷ்டித்த இவ்வுலகில், எவ்வாறு தீமை தோன்றியது? ஒரு இடம்கூட பாக்கி இல்லாமல் எங்கு பார்த்தாலும் வியாதியும், தரித்திரமும், வருத்தமும், துன்பமும் நிறைந்திருப்பதற்கு காரணமென்ன? இந்நிலையில் உள்ள நமக்கு உதவி செய்ய தேவன் ஆர்வமற்று இருக்கிறாரா? இக்கேள்விகளுக்கெல்லாம் நிச்சயமாய் ஓர் பதில் தேவையாயிருக்கிறது.

பரிசுத்த வேதாகமம் இந்த பதிலை நமக்குத்தருகிறது! இந்த பதிலை நாம் காண்பதற்கு முன்பாக, தேவனைப்பற்றிய சில உண்மைகளில் நாம் தெளிவடைவது நல்லது. பரிசுத்த வேதாகமத்தின் முதல் வசனமே, "ஆதியிலே தேவன்..." என்றே துவங்குகிறது (ஆதி.1:1) தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்தில் உள்ள 66 புத்தகங்களில் ஆதியாகமமே முதல் புத்தகம்! நீங்கள் வாசிக்கும் இச்சிறிய புத்தகத்தில், அடைப்புக் குறியில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் வேதப்புத்தகத்தின் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டும் குறிப்புகளே ஆகும்.

பரிசுத்த வேதாகமம் தேவனைக் குறித்த உண்மையை, அவர் எப்படி நித்திய காலத்திற்கு முன்பாகவே இருக்கிறார் என்பதை விளக்கிக்கூற முற்படாமல், அதை ‘அப்படியே ஏற்றுக்கொள்ளும்’ உண்மையாகவே மிக எளிதாய் நமக்குச் சொல்லுகிறது.

மானிடராகிய நம்மிடம் தனிப்பட்ட விதத்தில் உறவு கொள்ள விரும்பும் ஒருவராகவே வேதாகமம் தேவனை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறது. மனுஷீக ஆள்த்துவங்களைப் போலவே தேவனும் ஓர் மானிடனைப் போல் இருப்பார் என நாம் ஒருக்காலும் எண்ணக்கூடாது. அவர் ஆவியாயிருக்கிறார்; எல்லா விதத்திலும் அவர் முடிவற்ற தன்மை கொண்டவர்; குணாதிசயத்தில் எக்காலத்தும் மாறாதவர்! அவர், சர்வ வல்லமை கொண்டவர்; சர்வமும் அறிந்தவர்; அளவிற்கடங்கா ஞானம் நிறைந்தவர்; எல்லாயில்லா அன்பு நிறைந்தவர்; எல்லையில்லா தூய்மை நிறைந்தவர்!!

தேவனின் எல்லையில்லா அன்பில் சுயநலம் என்பது முற்றிலுமாய் இல்லவே இல்லை. ஆகவேதான் அவர் தன்னுடைய மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பிறருக்கு பகிர்ந்து கொடுத்திட விரும்புகிறார். இதற்காகவே அவர் ஜீவராசிகளை சிருஷ்டித்தார். அந்த சிருஷ்டிப்பில் எல்லாவற்றிற்கும் முதலாக, அவர் இலட்சக்கணக்கான தூதர்களை சிருஷ்டித்து, தன்னுடைய சந்தோஷதையும் அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார்.

இவ்வாறு தோன்றிய தூதர்கள் கூட்டத்திற்குத் தலைவனாக இருக்கும்படி தேவன் ஒரு தூதனை சிருஷத்தார். அவனுடைய பெயர் லூசிபர்!

தேவன் சிருஷ்டித்த வான மண்டல கிரகங்கள் அல்லது மரங்களைப் போல் அல்லாமல், லூசிபருக்கு மற்ற தூதர்களுக்கு "சுயாதீன- சித்தத்தைக்" கொடுத்து தேவன் சிருஷ்டித்தார். இந்த சுயாதீனத்தைப் பெற்ற தூதர்கள் அதைக்கொண்டு தேவனுக்குக் கீழ்படியவோ அல்லது கீழ்படியாமல் இருப்பதற்கோ தாங்களாகவே தெரிந்துகொள்ள முடியும்.

ஒருவன் ‘குணாதிசயம்’ கொண்டவனாக இருப்பதற்கு "சுயாதீன சித்தம்" என்ற தன்மை முதலாவது அடிப்படைத் தேவையாகும். கிரகங்களோ அல்லது மரங்களோ நன்மைசெய்யவும் முடியாது, தீமைசெய்யவும் முடியாது. ஏனென்றால் அவைகளுக்குத் தாங்களாகவே தெரிந்துக்கொள்ளும் சுயதீனம் இல்லாமல் சிருஷ்டிக்கப்பட்டபடியால், இவைகள் தேவனுடைய பிரமாணங்களுக்கு அப்படியே கீழ்படிந்துவிடுகின்றன. இதன் நிமித்தமே இவைகள் தேவனுடைய புத்திரர்களாகவும் இருந்திட முடியாது.

மனிதனையோ தேவன் தன்னுடைய சாயலில் சிருஷ்டித்தார். இதுவே நாம் அவருடைய பிள்ளைகளாய் மாறுவதற்குரிய சாத்தியத்தை நமக்கு வழிவகுக்கிறது. நாம் குணாதிசயம் கொண்டவர்கள் என்பதை நமக்குள் இருக்கும் மனசாட்சியின் சத்தம் நமக்கு நினைவூட்டுகிறது. மேலும் நாம் தேவனுடைய பிரமாணங்களை மீறும் பொழுதெல்லாம், இம்மனசாட்சியின் சத்தம் நம்மை உணர்த்துவிக்கிறதாயிருக்கிறது.

"சுயதீன சித்தம்" "மனசாட்சி" ஆகிய இந்த இரண்டையும் உடையவர்களாகவே தூதர்களும் சிருஷ்டிக்கப்பட்டார்கள்.

இவ்வொப்பற்ற தன்மை கொண்ட தூதர்களுக்குத்தான் லூசிபர் தலைவனாயிருந்தான். ஆனால் இவன் வெகு சீக்கிரத்தில் நல்லதற்ற லட்சியங்களையும் கொண்டிடத் துவங்கினான். இவ்வாறு இங்கிருந்து தான் இவ்வையகத்தில் தீமை முதலாவதாகத் தோன்றியது!

லூசிபரின் சிந்தைகள் நல்லதற்றதாக மாத்திரமல்லாமல், அவைகள் பெருமையின் சிந்தைகளாகவும், முரட்டாட்டத்தின் சிந்தைகளாகவும், அதிருப்தி கொண்ட சிந்தைகளாகவும் இருந்தது.

தீமை முதலாவதாக இருதயத்தில் தோன்றியது என்பதை நாம் நினைவிற்கொள்ளக் கடவோம். ஆரம்ப நிலையில் வெளித்தோற்றமான எவ்வித செயலும் நடைப்பெறவில்லை. அவ்விதமே இன்றும் தீமையானது இருதயத்தில் இருந்தே முளைத்தெழும்புகிறது. இவ்வுலகத்திற்கு தீமையைக் கொண்டுவந்த முதல் பாவம் "பெருமை" என்பதையும் நாம் நினைவிற்கொள்வோமாக!

இந்நிலையில் லூசிபரை தன் உடனடி சமூகத்தை விட்டு கீழே தேவன் தள்ளினார். அக்கணமே இந்த லூசிபர் "சாத்தான்" என அழைக்கப்பட்டான்!

லூசிபரையும் அவனோடு சேர்ந்து முரட்டாட்டம் செய்த தூதர்களையும் தேவன் கீழே தள்ளினார். வீழ்ச்சியடைந்த இந்த தூதர்களே "பெல்லாத ஆவிகள்" அல்லது "பிசாசுகள்" ஆவார்கள். இப்பொல்லாத ஆவிகளே இன்று ஜனங்களை அலைக்கழித்து துன்புறுத்துகின்றன!

ஒருவேளை இப்புத்தகத்தை வாசிக்கும் நீங்கள் கூட பொல்லாத ஆவிகளினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு யாராவது உங்கள் மீது மாந்திரீகமான செய்வினை ஏவுதல் செய்திருக்கலாம். அவ்வாறு இருந்தால், உங்களுக்கென பரிசுத்த வேதாகமம் ஓர் நற்செய்தியை வைத்திருக்கிறது. இப்பொல்லாத ஆவிகளின் தொந்தரவிலிருந்து சம்பூரணமான விடுதலையை நீங்கள் நிரந்தரமாய்ப் பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் இப்புத்தகத்தை கவனமாய் வாசியுங்கள். இவ்வாறு இப்புத்தகத்தை நீங்கள் வாசித்து முடிக்கும் வேளையில், தேவன் உங்களுக்குச் செய்யும் அற்புதத்தை நீங்கள் நிச்சயமாய் காண்பீர்கள்.

இத்தருணத்தில் சிலர், "இவ்வுலகத்தின் எல்லா தீமைகளுக்கும் சாத்தான்தான் காரணமென்றால், சாத்தானையும் எல்லா அசுத்த ஆவிகளையும் தேவன் ஏன் அழிக்காமல் வைத்திருக்கிறார்?" எனற கேள்வியை கேட்கக்கூடும்.

தேவன் விரும்பினால் சாத்தானை ஒரு நொடிப்பொழுதில் நிச்சயமாய் அழித்துவிட முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை! சாத்தானையும் அவனோடிருக்கும் பிசாசுகளையும் அனுமதித்து இருக்க வைத்திருப்பதில் ஓர் தெளிவான நோக்கத்தைத் தேவன் வைத்திருக்கிறார். அவ்வித அவருடைய நோக்கத்தின் ஒரு பகுதியாதெனில், இப்பூமிக்குரிய வாழ்க்கையை மனிதனுக்கு கடினமானதாகவும்; பாதுகாப்பற்றதாகவும்; அபாயம் நிறைந்ததாகவும் செய்வதற்கு சாத்தானையே தேவன் உபயோகப்படுத்துகிறார்.

அது ஏனென்றால் "இதன் மூலமாய்" ஜனங்கள் இப்பூமிக்குரிய சொகுசான வாழ்க்கையினால் ஈர்க்கப்பட்டுவிடாமல், தேவனிடத்தில் திரும்பவும், நித்திய வாழ்க்கையில் அக்கறை கொள்ளவும் செய்கிறார்!

காரியம் இவ்வாறு இருப்பதால், இவ்வுலகத்தில் நமக்கு ஏற்படும் துன்பங்கள், தேவன் நம்மீது கொண்ட அன்பின் சின்னமாகவே இருக்கிறது. இதுவே பரிசுத்த வேதாகமம் நமக்கு வழங்கும் செய்தியாகும்!

இதுபோன்ற உலகத்தில் காணும் தீமைகளைத் தேவன் உபயோகித்து அதன்மூலம் ஜனங்களை அவர்களின் பாவங்களிலிருந்து திரும்பும்படிச் செய்கிறார். இவ்வாறாகவே ஜனங்கள் பரலோகத்தில் உள்ள தங்கள் நித்திய வீட்டைக் கண்டுகொள்ளும்படி தேவன் நடத்துகிறார்!

ஆகவேதான், தேவன் இவ்வுலகத்தில் உள்ள எல்லா தீமைகளையும் மிக எளிதில் அகற்றிவிடக் கூடுமென்றாலும், அவர் அவ்விதமாய் செய்யவில்லை! ஏனென்றால் இத்தீமைகளின் மூலமாகவே தேவன் தம்முடைய மகிமையான நோக்கத்தை நிறைவேற்றி முடிக்கிறார்!!

 அடுத்த அத்தியாயம் 

இந்த கட்டுரை சகரியா பூணன் எழுதிய "THE REAL TRUTH" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்

www.cfcindia.com/tamil/

கருத்துகள் இல்லை: