வெள்ளி, 10 டிசம்பர், 2010

"கந்தை ஆடையில்" தெரிந்து கொண்ட கர்த்தர்! (FOUND BY GOD IN RAG CLOTHES)

           "தேவனின் கருப்பு வைரம்" என அழைக்கப்பட்ட இளம் ஆப்பிரிக்க மிஷனரி சாமுவேல் மோரிஸ், ஒருசமயம் தேவனால் உந்தப்பட்டு நியுயார்க் பட்டணம் சென்றார். அங்கு "ஸ்டீபன் மெரிட்" என்ற ஐசுவரியமான சுவிஷேச பிரசங்கியிடம் "நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறவேண்டும்" என கூறுவதற்காகவே தேவன் சாமுவேல் மோரிஸை அனுப்பியிருந்தார்! அங்கு, அவசரமாய் ஒரு தனவந்தரின் அடக்க நிகழ்ச்சிக்கு அவர் புறப்பட்டு விட்டார். தன்னைக் காண வந்த மோரிஸை தன் குதிரை வண்டியில் ஏற்றிக்கொண்டார். வழியில் இரண்டு குருமார்களையும் ஏற்றிக்கொண்டார்! அந்த வெள்ளைக்கார குருமார்கள், கந்தை ஆடையில் இருந்த மோரிஸை "இந்த கரிய உருவம்" எங்கே இறங்கும்? என்ற பாவனையில் இகழ்ச்சியுடன் பார்த்தார்கள். இந்த இகழ்ச்சியைப் பொருட்படுத்தாத மோரிஸ் "குதிரை வண்டியில் நீங்கள் எப்போதாவது ஜெபித்ததுண்டா?" என ஸ்டீபன் மெரிட்டிடம் கேட்டார்! அதற்கு மெரிட் "இல்லை" எனக்கூற, "இப்போது ஜெபிப்போம்!" என முழங்கால் படியிட்டு ஜெபிக்க, அங்கேயே ஸ்டீபன் மெரிட் அபிஷேகம் பெற்றார். ஓர் தெய்வ பயம் கொண்ட அதிர்ச்சி, அந்த குருமார்களை ஆட்கொண்டது! அடக்க நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது, ஓர் துணிக்கடையில் வண்டியை நிறுத்தி, விலை உயர்ந்த ஆடையை  வாங்கித் தந்து உடுத்தும்படி மோரிஸிடம் குருமார்கள் வற்புறுத்தினர். அதை அவர் அணிந்தார்! கண்ணாடியில் அந்த ஆடை, மிடுக்காய் இருந்தது! ஆனால், களைந்து போட்ட "தன் கந்தை ஆடையை" பார்த்த சாமுவேல் மோரிஸுக்கு, அதுவே "மிக அருமையானதாக" காட்சி அளித்தது "என்னை தேவன், இந்த கந்தை ஆடையில் கண்டுதான், தெரிந்தெடுத்தார்!" என கூறி அதை பத்திரப்படுத்தி, தன் அலுவலகத்தின் கண்ணாடிப் பெட்டியில் "காட்சிப் பொருளாக வைத்து" தன் தேவனைத் துதித்து மகிழ்கொண்டாடினார்!!                                                                                                                                  -Selected

வியாழன், 9 டிசம்பர், 2010

இதுவே உமக்கு பிரியம்! (HIS GOOD PLEASURE)

            சுத்த இருதயமா (சங். 51: 10) ? நொறுங்குண்ட இருதயமா (சங். 51: 17) ? இவைகளில் தேவா, உமக்கு எது பிரியம்? என கேள்வி தொடுக்கப்பட்டால், அதற்கு தேவன் தரும் பதில் "நொருங்குண்ட இருதயமே எனக்குப் பிரியம்" என்பதாகவே இருக்கும்1 (சங். 51:18) ஏனெனில், சுத்த இருதயம் பெற்று வாழ்பவர்கள், நொருங்குண்ட இருதய வாழ்விற்குள் வராமலே இருந்திட முடியும். சுத்த இருதயம் கொண்டவர்கள் தேவனை தரிசிப்பார்கள் அல்லது காண்பார்கள் என்பது நிஜம்தான்! (மத். 5:8) ஆகிலும் நொருங்குண்ட இருதயம் பெற்றவர்களோ தேவனுக்கு சமீபமான ஐக்கியம் பெறுவார்கள்!(சங்.34:1)                                                                                                                                                                                                                                                                                                                                                நம்மோடு ஐக்கியம் கொள்ளும்பொருட்டே தேவன் நம்மை சிருஷ்டித்தார்! அதுவே அவருக்கு பிரியம்!! ஆனால், சுத்த இருதயத்தைக் கடந்து "நொருங்குண்ட வாழ்க்கைக்கு" எத்தனைபேர் "மனப்பூர்வமாய்" பிரியம் கொள்வார்கள்? என்பது இன்றும் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது! ஏனெனில் அதற்கு ஒரு பலிபீடம் வேண்டும்! எதற்கு? அதில் தானே பலியாவதற்குத்தான்!! இந்த ஊக்கமான நெஞ்சுறுதி அல்லது ஓங்கிய விசுவாசமே இன்று அரிதாய் காணப்படுகிறது!                                                                                                                                                                                                                                                                                                     "இதோ உம் சித்தம் செய்ய வருகிறேன்" என இந்த பூமிக்கு மனுபுத்திரனாய் இயேசு ஒரு சரீரத்தோடு வந்த அடுத்த கணமே, தன் பிதாவுக்கு பிரியமானதைச் செய்திட நாடினார்! "இயேசுவைக்குறித்து" புத்தகச் சுருளில் தேவன் எழுதி வைத்த நோக்கமும் இதுதான்! (எபி. 10:7) இந்த நோக்கத்தின் பின்னணி யாதெனில், தன் குமாரனோடு ஐக்கியம் கொள்ளவேண்டும் என்ற அவரது பிரியம்! நாசரேத் தொடங்கி, கல்வாரி வரை, அவர் வாழ்வின் 33 1/2 வருட ஜீவியமும் ஒரு பலிபீடத்தின் ஜீவியம்தான்! அவருடைய "சரீரம் பிட்கப்பட்டதற்கு" அல்லது அவரது சரீரம் "நொறுக்கப்பட்டதற்கு" காரணம், பிதாவுக்கு பிரியமான "அவரோடு ஒன்றான ஐக்கியம் பெறுவதற்கே ஆகும்!                                                                                                                                                                                                                அசட்டை பண்ணப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும், துக்கம் "நிறைந்திருப்பதும்" பாடு அனுபவிப்பதும், ஒடுக்கப்படுவதும், கள்ளர் மத்தியில் ஒருவராக்கப்படுவதும்....... கர்த்தருக்குப் பிரியம்! (ஏசாயா 53:7-10) ஏனெனில், இங்குதான் கர்த்தருக்குப் பிரியமான தாசன், அவரை அறிந்து நெருங்கி வாழும் ஐக்கியம் பெறுகிறான்! (ஏசாயா 53:11). இதே ஐக்கியத்தைத்தான் தன் சீஷர்களும் பெற்றிட இயேசு வாஞ்சித்தார்! ஏனெனில், இந்த ஐக்கியத்தை பெற்ற யாவருமே ஒருவரோடொருவர் தெய்வீக ஐக்கியம் கொள்வது தானாகவே மலர்ந்து விடும்! "நான் உம்மோடும், அவர்கள் நம்மோடும்" என இயேசு குறிப்பிட்ட "தேறின ஐக்கியத்தை" கண்டடைவார்கள்! (யோ. 21:23).                                                                                                                                                                                                                                   தன் சுத்த இருதயம் தொடங்கி... இந்த நொருங்குண்ட இருதயம் வரை பெற்றிடும் கல்வாரிப் பயணத்திற்கு யார் ஆயத்தம்? மெய்யான "கர்த்தருடைய மேஜை" அங்குதான் உள்ளது. "ஆதமின் (அல்லது நமது) ஜீவன்" சிதைந்து "கிறிஸ்துவின் ஜீவன்", அவரது மகிமை அல்லது திவ்ய சுபாவப் பரிமாற்றம் இங்கேதான் சம்பவிக்கிறது! "நானே ஜீவன்" என்றவரோடு ஐக்கியமும் இங்குதான் பரிமளிக்கிறது! ஆம், அனுதினமும் அவரது மேஜையில் அமர்ந்து புசித்து, ஐக்கியம் கொள்ளும் பாக்கியவான்கள் இவர்களே! ஓ கர்த்தாவே, இதுவே உமக்குப் பிரியம்.... இதுவே எமக்கும் பிரியம்!!                                                                                                                                                                                                                                                                            T. ரத்தினகுமார் 

புதன், 24 நவம்பர், 2010

எனக்கு எல்லாம் இயேசுவே! (Jesus is my all)

ஒரு சாதாரண வேலைக்காரனாகவே இயேசு வந்தார்! எல்லா கிறிஸ்த்தவத் தலைவர்களுமே ஒரு ஊழியக்காரனின் ஜீவியம் எப்படி இருக்கவேண்டுமென்று பிரசங்கிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், நடைமுறையில் ஒரு "வேலைக்காரனாய்" (ஊழியக்காரனாய்) இருப்பதன் அர்த்தம் என்ன? அந்த நடைமுறைக்கு ஒப்பிட்டே நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். கிறிஸ்த்தவத் தலைவர்களே, உங்கள் சக ஊழியர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள்? உங்கள் குழுவோடு நேற்றுத்தான் சேர்ந்த ஒரு இளைய-ஊழியனை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள்? அந்த ஊழியன் மெய்யாகவே உங்களுக்கு ஒரு சகோதரனாய் இருக்கிறாரா? அல்லது அந்த சகோதரன் உங்களுக்கு அஞ்சி ஜீவிக்கிறாரா? காரியம் அப்படியாய் இருக்கும்போது, "ஊழியனின் தகுதி" குறித்து நீங்கள் காலமெல்லாம் பிரசங்கித்துக் கொண்டிருந்தாலும், நீங்களோ அதைப்பற்றி சிறிதும் விளங்கிக் கொள்ளவில்லை என்றே உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன். ஆம், உங்கள் கண்கள் இன்னமும் இயேசுவைக் காணவில்லை!                                                                                                                                                                                                                         இயேசுவோ அத்தனை எளிமையாய் இருந்தார். அவர் ஒருபோதும் ஜனங்களுக்கு மேலாய்த் தன்னை உயர்த்தவேயில்லை! அவர் தம்மை "மனுஷ குமாரன்" என்றே கூறினார். அதற்கு அர்த்தம், "அவர் ஒரு சாதாரண மனிதர்" என்பதேயாகும். அவர் அத்தனை பரிசுத்தராய் தன் பிதாவோடு நித்தியகாலமும் "தேவகுமாரனாய் ஜீவித்தவர்! ஆனால் அவரோ, கீழே இறங்கி வந்து, இந்த பூமியில் ஒரு சாதாரண மனிதனாகவே வாழ்ந்தார்! எல்லாவிதத்திலும் அவர் தன் சகோதரர்களுக்கு ஒப்பாய் மாறினார்!!                                                                  எல்லாவிதத்திலும் நம் சகோதரர்களுக்கு ஒப்பாய் நாமும் மாறவேண்டுமென்றால், நம்மிலுள்ள "ஏதோ ஒன்று " சாகவேண்டும்! இயேசுவைப்பற்றி இவ்வாராகவே கூறப்பட்டுள்ளது, "அவர் தன்னைத்தானே மரணபரியந்தமும் தாழ்த்தினார்". இவ்வாறு நம்முடைய "சுயத்திற்கு மரிக்கும்போதுதான், நம்முடைய தாழ்மையை நாம் நிரூபித்திட முடியும்!   கோதுமைமணியானது நிலத்தில் விழுந்து "சாகும் போதுதான்" மிகுந்த கனிகளைத் தரமுடியும் என இயேசு கூறினார். இந்த சத்தியத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பாக, மெய்யான நடைமுறை கிறிஸ்த்தவ வாழ்க்கைகுப் போராடிய நேரத்தில் நான் கண்டுபிடித்தேன். நான் இந்தியாவில் ஆண்டவருக்காகச்செய்திடும் வலிமையான ஊழியம் "நிலத்தில் விழுந்து சாவதுதான்" என்பதை அப்போது நான் கண்டுகொண்டேன்! ஆம், என் சுய-சித்தத்திற்கு சாவு! ஜனங்கள் என்னைக்குறித்து என்ன எண்ணுகிறார்கள் என்ற அபிப்பிராயங்களுக்கு சாவு! என் சுய-இலட்சியங்களுக்கு சாவு!  சுயமாய் எண்ணிட்ட என் "இலக்குகளுக்கு" (Goals) சாவு! என் பண ஆசைக்கு சாவு இவ்வாறு ஒவ்வொன்றாய் தொகையிட்டு மொத்தத்தில் "என் சுயத்திற்கு" செத்திடும் வாழ்க்கையை நான் மேற்கொண்டேன்! இந்த வழ்க்கையை மேற்கொண்டபிறகு எனக்கு இயேசுவே எல்லாமுமாய் மாறினார்!! இப்போது நான் ஒவ்வொரு நாளும் இயேசுவை நோக்கிப்பார்த்து, சங்கீதக் காரனைப்போல நேர்மை கொண்ட நெஞ்சத்தோடு....... " பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத்தவிர எனக்கு  வேறே விருப்பமில்லை!" (சங்கீதம் 73:25) என என்னால் கூறிட முடிகின்றது!!       நான் படுக்கையில் படுத்திருக்கும் சமயங்களில் "ஆண்டவரே, என் ஊழியம் எனக்கு "தேவன்" அல்ல. நீர் ஒருவரே என் தேவன்! உமக்கு நான் தந்த ஸ்தானத்தை வேறு யாதொருவருக்கும் நான் தந்திடமாட்டேன். நீரே எனக்கு எல்லாமுமாய் இருக்கிறீர். என்னுடைய சத்தத்தை நீர் என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளலாம் அல்லது என் சரீரத்திற்கு "வாதம்" வர நீர் அனுமதிக்கலாம் அல்லது நீர் விரும்பிய எதையும் எனக்கு நீர் செய்யலாம்! ஆகிலும், நானோ உம்மை என் முழு இருதயத்தாலும் தொடர்ந்து நேசிப்பேன்" என நான் தேவனைப் பார்த்து அடிக்கடி கூறுவதுண்டு. ஆம் நான் பெற்ற சந்தோஷத்தை யாரும் என்னிடமிருந்து பறித்துக்கொள்ளவே முடியாது......    ஏனென்றால் தேவனுடைய சமூகத்தில் தான் "நித்திய பேரின்பம்" உள்ளதே! இந்த ஊற்றுக்கண்ணிலிருந்து மாத்திரமே, ஜீவநதிகள் நம்மூலமாய் புரண்டோடிடமுடியும்!!                                                                                                                                                                                                                                      -சகரியா பூணன்

திங்கள், 10 மே, 2010

சுயத்திற்கு மரித்தல்

1.   நீங்கள் மறக்கப்பட்டு,  அலசட்சியப்படுத்தி ஒதுக்கித் தள்ளிவிடப்படும் சமயங்களில்.................ஏற்பட்ட அவமானங்களுக்காகச் சற்றேனும் மனம் புண்படாமல்  "கிறிஸ்துவுக்காய் பாடுபட  நானும்  தகுதி பெற்றேனே! என்ற மகிழ்ச்சியில் மாத்திரம்  நீங்கள்  நிலைத்திருந்தால்,   அதுவே  சுயத்திற்கு  மரித்தல்!

2.  உங்கள்  நன்மை  தீமையாகப் பேசப்பட்டு,  உங்கள்  விருப்பங்கள் மறுக்கப்பட்டு,  உங்கள் கருத்துக்கள்  பகடி செய்யப்படும் சமயங்களில்..............உள்ளத்தில்  கோபப்படாமல்,  நியாயத்தைத் தட்டிக் கேட்க முயற்சிக்காமல்,   அன்பார்ந்த  மௌனத்தோடு  நீங்கள் பொறுமையாய்யிருந்தால்,  அதுவே  சுயத்திற்கு  மரித்தல்!

3.  எந்த ஒழுங்கின்மையையும்,  காலந்தாழ்த்தி  வருதலையும்,  வீண் விரயங்களையும், ஆவிக்குறிய  உணர்வற்ற செயல்களையும் .......... "இயேசுவைப் போலவே"  அன்பு கலந்த பொறுமையுடன்  சகித்துக்கொண்டால்,   அதுவே சுயத்திற்கு  மரித்தல்!

4.  என் பெயரைக் குறிப்பிடவேண்டும்....,  என் செயல்கள்  பேசப்படவேண்டும்.... போன்ற  விருப்பம்  துளிகூட  இல்லாமல்.............."அறியப்படாதவனாகவே" இருந்துவிட மெய்யான விருப்பத்தை  நீங்கள்  பெற்றிருந்தால்,  அதுவே சுயத்திற்கு  மரித்தல்!

5.  தேவசித்தத்தின்படியான  எவ்வித உணவானாலும்,  உடையானாலும், சீதோஷண  நிலையானாலும்,  சமுதாயமானாலும்,  தனிமையானாலும் அவைகளில் நீங்கள் மனநிறைவு கொண்டிருந்தால்,   அதுவே   சுயத்திற்கு  மரித்தல்!

6.  தேவை  மிகுந்த  இக்கட்டான  சூழ்நிலைகளில்  நீங்கள்  இருக்கும்போது உங்கள்  சகோதரனின்  தேவை சந்திக்கப்பட்டு  ஐசுவரியமடைவதைக் காணும்போது............. சிறிதேனும்  பொறாமை  உணர்வு  கொள்ளாமல், தேவனிடம் கேள்வி கேட்காமல் சகோதரனோடு சேர்ந்து உங்களால் களிகூர முடியும் என்றால்,  அதுவே சுயத்திற்கு  மரித்தல்!

7.  உங்களைவிட குறைவான  ஒருவரின் புத்திமதியையும், கடிந்துகொள்ளுதலையும்...............இருதயத்தில் எவ்வித எதிர்ப்பும்  கோபமும் கொள்ளாமல், அவைகளை உள்ளத்தில் மாத்திரமல்லாமல் வெளியரங்கமாயும் நீங்கள்  தாழ்மையுடன்  ஏற்றுக்கொள்ள முடியுமென்றால்அதுவே  சுயத்திற்கு  மரித்தல்!


"ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான்  வெறுத்து  தன் சிலுவையை  அனுதினமும் எடுத்துக்கொண்டு , என்னைப் பின்பற்றக்கடவன்.''    (லூக்கா   9-23)http://www.cfcindia.com/tamil/

 செவ்வாய், 4 மே, 2010

தேவ ஆசீர்வாதமா? தேவ அங்கீகாரமா?

இன்றைய உலகில் இரண்டு ரகமான கிறிஸ்தவ விசுவாசிகள் இருக்கிறார்கள்

1) உலகப் பொருட்களின் அடிப்படையில் தேவ ஆசீர்வாதத்தை தேடுபவர்கள்.

2) தெய்வ பக்தியின் அடிப்படையில் தேவ அங்கீகாரத்தை வாஞ்சித்துத் தேடுபவர்கள்.

இவ்விரு சாராருக்கும் இடையில்தான் எத்தனை பெருத்த வித்தியாசம்!
ஏராளமான இன்றைய விசுவாசிகள், தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதில், அதிலும் பிரதானமாய் உலகப் பொருட்களினால் ஆசீர்வதிக்கப்படுவதில் மாத்திரமே திருப்தி கொண்டுவிட்டார்கள். எனவேதான் இன்றைய கிறிஸ்தவ புத்தகக் கடைகளில், "ஒருவர் எப்படி தன் சரீர வியாதியிலிருந்து சுகமடைய முடியும் என்பது பற்றியும், தசமபாகம் செலுத்தி எவ்வாறு ஐசுவரியவானாகமுடியும்" என்பது பற்றியுமான புத்தகங்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. இவை வலியுறுத்துவது எல்லாம், சரீர-பொருளாதார சுக வாழ்வு! சொகுசு வாழ்க்கை! செல்வசெழிப்பு! இவை என்ன? இவை அனைத்தும் சுயத்தை மையமாகக்கொண்டு வாழும் ஓர் வாழ்க்கை! ஆனால் தேவனுடைய வார்த்தையோ, நாம் நமக்காக ஜீவிக்காமல் அவருக்காக ஜீவிக்க வேண்டும் என்பதற்காகவே இயேசு மரித்தார் என்றல்லவா கூறுகிறது (2கொரிந்தியர் 5:15). அதாவது நம்மை நாமே பிரியப்படுத்தி ஜீவிப்பது அல்ல, தேவனை மாத்திரமே பிரியப்படுத்தி ஜீவிக்கும் ஓர் ஜீவியம்!
கிறிஸ்தவ ஊழியங்களில் உள்ள ஆசீர்வாதத்தை சற்று எண்ணிப்பாருங்கள். ஆம்! தான் பூரணமாய் அங்கீகரிக்க முடியாத எண்ணற்ற ஊழியங்களை தேவன் ஆசீர்வதிக்கத்தான் செய்கிறார். ஆனால் இவ்விதம் இயேசுவின் நாமத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனேக ஊழியங்களை அவர் திட்டவட்டமாக அங்கீகரிக்கவே இல்லை!
தேவன் மூலமாய் உலகப் பொருட்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நிறைவேற்ற வேண்டிய ஒரே நிபந்தனை என்னவென்றால், ஒருவர் நல்லவராகவோ அல்லது தீயவராகவோ இருக்க வேண்டும், அவ்வளவுதான்!! ஏனென்றால், தேவன் நீதியுள்ளோர் மீதும் அநீதியுள்ளோர் மீதும் ஒரே சமமாகவே தன் சூரியனை உதிக்கப் பண்ணுகின்றார் (மத்தேயு 5:45) என இயேசு கூறினார். எனவே பொருளாதார ஆசீர்வாதங்கள், தேவன் ஒரு மனிதனின் வாழ்க்கையை அங்கீகரித்தற்கு அடையாளமே கிடையாது! வனாந்திரத்தில், இரண்டு கோடி இஸ்ரவேலர்கள் 40-வருடங்களாக தேவனுக்கு கீழ்ப்படியாமல் இருந்தனர். அவர்கள் மீது தேவன் கடுமையாய் கோபம் கொண்டிருந்தார் (எபிரேயர் 3:17). இருப்பினும், இந்த எல்லா வருட காலமும் தேவன் அவர்களுக்கு உணவையும், நல்ல சுகத்தையும் கொடுத்தார். ஆம், அதையும் "அற்புதமாகக்" கொடுத்தார் (உபாகமம் 8:2). எனவே சரீர பொருளாதாரத் தேவைகளுக்கான ஜெபத்திற்கு கிடைக்கும் "அற்புதமான பதில்கள்", தேவன் ஒரு மனிதனின் வாழ்க்கையைக் குறித்து மகிழ்ந்திருக்கிறார் என்பதற்கு அடையாளம் அல்லவே அல்ல!
இதற்கெல்லாம் மாறாக, இப்பூமியில் இயேசு வாழ்ந்தபோது, 30-வயது நிறைவுபெற்றதும் தேவ அங்கீகாரம் அவருக்கு கிட்டியது! அதற்கு ஒரே காரணம் என்னவெனில், இந்த எல்லா வருடங்களிலும் இயேசு உண்மையுள்ளவராய் இருந்து "அவரைப் பாவம் செய்யும்படி" தூண்டிய சோதனைகளை மேற்கொண்டு ஜெயித்தார்! அவர் தன்னையல்ல, பிதாவை மையமாகக் கொண்டதோர் வாழ்க்கையே வாழ்ந்தார்! ஆம், அவர் தன்னைத் தானே பிரியப்படுத்துகின்ற ஒன்றையும் ஒருபோதும் செய்யவே இல்லை (ரோமர் 15:3). அவருடைய ஞானஸ்நானத்தில், "இவர் என் நேச குமாரன் இவரில் நான் பிரியமாயிருக்கிறேன்" என்றே பிதா நற்சாட்சி வழங்கினார். ஆம், "நான் எப்படியெல்லாம் ஆசீர்வதித்த என் நேச குமாரன்" என்று பிதா கூறவேயில்லை! இந்த இரண்டாவது சாட்சியில் எந்த மதிப்பும் இல்லவேயில்லை! இயேசுவுக்குத் தேவையாய் இருந்ததெல்லாம் தேவ அங்கீகாரத்தை முடிசூட்டும் அந்த முதலாவது சாட்சியே ஆகும்! நாமும் இதே சாட்சியைப் பெறுவதற்காகத்தான் இன்று இயேசுவைப் பின்பற்றுகிறோம்!!
பிறவியிலிருந்தே ஆதாமின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும் "சுயத்தை" மையமாகக் கொண்ட இழிபிறவிகள்! ஆரம்பப்படியாக, பாவ மன்னிப்பின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்படியே அவரிடம் வருகிறோம். இதையடுத்து, இடைவிடாத பின்னல் தொடர்பாக சரீர சுகம்; செல்வ செழிப்பு; உத்தியோகம்; வீடு; வாழ்க்கை துணை..... என ஏக்கம் கொண்டு அவைகளை அவரிடமிருந்து கேட்டு வாரிக்கொள்ள வாஞ்சிக்கிறோம். நம்முடைய கண்களுக்கும், ஜனங்களின் கண்களுக்கும் ஆழ்ந்த பக்தியுடையவர்களாய் நாம் காணப்பட்டாலும்கூட இன்னமும் நம் வாழ்க்கை சுயத்தை மையமாககொண்டே இருந்திட முடியும். இவ்வாறு எக்காலமும் ‘நான்’ ‘எனக்கு’ ‘என்னுடைய’ என்றும், சரீர பொருளாதார ஆசீர்வாதங்கள் என்றும்.... சுய வாழ்வின் மையத்திலேயே ஜீவித்து செத்துப் போகிறார்கள். இது வேதனையன்றோ!
உண்மையான ஆவிக்குரிய தன்மையானது - கோபம், எரிச்சல், இச்சைநிறைந்த சிந்தைகள், பண ஆசை போன்ற பல பாவங்களிலிருந்து நாம் ஜெயம் பெறுவது மாத்திரம் அல்ல! நாம் நமக்காக ஜீவிப்பதிலிருந்து ஓய்திருக்கிறோமே, அதுதான் தேவ அங்கீகாரத்திற்குறிய மேன்மை! அதாவது, "என் சொந்த ஆதாயம்; என் சொந்த வசதி; என் சொந்த செளகரியம்; என் சுய சித்தம்; என் சுய உரிமைகள்; எனக்கான புகழ்ச்சி; இன்னும் என்ன, என் சுய ஆவிக்குரிய நலம்..." ஆகிய இவைகளிலிருந்து ஓய்ந்திருப்பதேயாகும். "இப்போது" சீஷர்கள் தாங்கள் ஜெபிப்பதற்கு கற்றுத்தரும்படி இயேசுவிடம் கேட்டபோது, ‘நான்’ ‘எனக்கு’ ‘என்னுடைய’ என்ற ஒரு வார்த்தைகூட இல்லாத ஓர் ஜெபத்தையே அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்! (லூக்கா 11:1-4). நாம் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையே தேடவேண்டுமென இயேசு நமக்கு கற்றுக்கொடுத்தார். அதாவது, நம் வாழ்வின் சிங்காசனப் பீடத்திலிருந்து சுயத்தை கவிழ்த்துப் போட்டு, தேவனையும் ஆவிக்குரியவைகளையுமே நம் வாழ்வின் மையமாகிய சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்ய வேண்டும்!
தேவனுக்கும், உலகப்பொருட்களுக்கும் (அதாவது ஐசுவரியம், சுகபோகம், வசதி போன்றவை) ஆகிய ‘இரண்டிற்கும்’ சேவகம் செய்ய ஒரு மனிதனாலும் கூடாது. தேவ ஆசீர்வாதம் நம்மீதும் நம் பிள்ளைகள் மீதும் தங்கியிருப்பதை வைத்து, தேவன் நம்மீது மகிழ்ச்சியாய் இருக்கிறார் என்பதற்கு ஓர் அடையாளமாக நாம் இன்னமும் எண்ணிக் கொண்டிருபோமென்றால், சாத்தான் நம்மை நன்றாய் வஞ்சித்துவிட்டான் என்பதற்கு சந்தேகமேயில்லை. தேவ ஆசீர்வாதம்; தேவ அங்கீகாரம் ஆகிய இவ்விரண்டும் முழுக்க முழுக்க வித்தியாசமான எதிர்முனைகள்! நாம் இப்பூலோக ஜீவியத்தை ஓடி முடிக்கையில் பெறவேண்டிய சாட்சி எதுவென்றால், ஏனோக்கு இப்பூமியை விட்டுச் செல்லுகையில் பெற்ற "அவன் தேவனுக்குப் பிரியமானவன்" (எபிரேயர் 11:5) என்ற சாட்சியேயாகும்! பார்த்தீர்களா, "தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவன்" என்ற சாட்சியில் எந்த மதிப்பும் இல்லவே இல்லை. ஏன் தெரியுமா? இவ்வுலகில் வாழும் கோடானுகோடி அவிசுவாசிகள் கூட இந்த சாட்சியைப் பெற்றுக் கொள்ள முடியுமே!! இன்று தேவன், தன் ஆசீர்வாதத்தை மட்டு மல்லாமல் தேவ அங்கீகாரத்தையே பிரதானமாய் வாஞ்சிப்பவர்களைக் காண்பதற்கு தவியாய்தவித்து நோக்கிக் கொண்டிருக்கிறார்! 

கேட்பதற்கு காதுள்ளவன் எவனோ அவன் கேட்கக் கடவன்!!

சகரியா பூணன் எழுதிய ஆங்கில புத்தகத்தின் தமிழ் வடிவம் 
T. ரத்தினகுமார்


http://www.cfcindia.com/tamil/

சனி, 24 ஏப்ரல், 2010

இதுவே மெய்யான சத்தியம் 8. நித்தியத்தைப் பற்றிய மெய்யான சத்தியம்

தேவனுடைய பிள்ளையாகிவிட்ட ஒருவனுக்கு இக்காலத்திற்குரியவைகளைக் காட்டிலும் நித்தியத்திற்குரியவைகள் அதிக மேன்மையுள்ளதாய் இருக்கும்!

2000 வருடங்களுக்கு முன்பு, ஆண்டவராகிய இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து பரத்திற்கு ஏறிச் சென்றபோது, தான் மீண்டும் இப்பூமிக்குத் திரும்ப வருவதாக வாக்குரைத்தார். இதைதான் "கிறிஸ்துவின் இரண்டாம் வருகை" என வேதம் அழைக்கிறது. இந்நிகழ்ச்சியே இவ்வுலக சரித்திரத்தில் இனி நடைபெறப் போகும் மாபெரும் நிகழ்ச்சியாகும்! கிறிஸ்து இப்பூமிக்குத் திரும்ப வரும்போது, நம் முழு ஜீவியத்திற்குரிய கணக்கை தேவனுக்கு ஒப்புவிக்க வேண்டுமென்பதை ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் உணர்ந்திருக்கவேண்டும்!!

"இவ்வுலகமும் அதிலுண்டான யாவும் கடந்து போகும் என வேதாகமத்தில் மிகவும் தெளிவாக தேவன் நமக்கு கூறியிருக்கிறார். எனவே இப்பூமிக்குரிய தற்காலிகமானவைகளுக்காக நாம் ஜீவிக்காமல், பரலோக ஞானமுள்ளவர்கள் நித்திய மதிப்புடையவைகளுக்காகவே ஜீவிப்பார்கள்! நித்திய மதிப்புடையவைகள் நம்முடைய குணாதிசயங்களாகிய பரிசுத்தம், அன்பு, நற்குணம், மன்னிக்கும் தன்மை, தாழ்மை போன்றவைகளாகும்! நாம் இந்தப் பூமியை விட்டு கடந்து போகையில் இதுபோன்ற மேலான குணாதிசயங்களை மாத்திரமே நம்மோடு எடுத்துச்செல்ல முடியும்.

"ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனுஶருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது"

எதிர்காலத்தில், சீக்கிரத்தில் ஒருநாள், இப்பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கைகுரிய கணக்கை தேவனுக்கு ஒப்புவிக்கும்படி, மரித்தோரிலிருந்து எழுப்பப்படுவார்கள். என்பதே உயிர்த்தெழுதல் ஆகும்! இருப்பினும், இரண்டு வகையான உயிர்த்தெழுதல் இருக்கும் என வேதாகமம் கூறுகிறது.

முதல் உயிர்த்தெழுதல், தாங்கள் இப்பூமியில் இருக்கும்போது கிறிஸ்துவினிடத்தில் திரும்பி, தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாய் மாறிய நீதிமான்களுக்காக நடைபெறும் உயிர்த்தெழுதல் ஆகும்!

இரண்டாம் உயித்தெழுதல், கிறிஸ்துவை தங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படாமலே மரித்தவர்களுக்காக நடைபெறும் உயிர்த்தெழுதல் ஆகும்!!

ஒரு மனிதன் தன் பாவங்களிலிருந்து மனந்திரும்பாமலும் தன்னுடைய பாவமன்னிப்பிற்காக கிறிஸ்துவை விசுவாசிக்காமலும் மரித்தால், ஒரு நாளில் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக அவன் நியாயம் தீர்க்கப்படுவான்! பின்பு அவன் நித்திய நித்திய காலமாய் ஓர் அக்கினிக் கடலில் தள்ளப்படுவான். அந்த இடம் அவனுக்கு ஓர் முடிவே இல்லாத தண்டனையாய் இருக்கும். இதுவே கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மறுபோருக்கு நித்திய காலமாய் நிகழப்போகும் பயங்கர எதிர்காலமாகும்!

இதற்கு மாறாக, தங்களைத் தாழ்த்தி, தங்கள் பாவங்களை ஒத்துக்கொண்டு, அவைகளை அறிக்கை செய்து விட்டுவிட்டு, கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலமாய் தேவன் வழங்கும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டவர்கள், பரலோகத்தின் மகிழ்ச்சிக்குள் பிரவேசிப்பார்கள்! அங்கே அவர்கள் தேவனோடும், இயேசுகிறிஸ்துவோடும் நித்திய காலமாய் வாசம் செய்வார்கள்!!

நாம் இந்த உலகத்தை விட்டு எப்போது மரிப்போம் என நம்மில் ஒருவரும் கூறிவிட முடியாது. நாம் வாழும் இந்த நாட்களில் ஒருநாள் இப்பூமியில் நம்முடைய கடைசிநாளாய் இருக்கப்போகிறது! அந்த நாள் வருவதற்கு முன்பாக..... உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்ற நிச்சயத்தையும், தேவனை சந்திப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறீர்கள் என்ற உறுதியையும் நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்!!

இந்த கட்டுரை சகரியா பூணன் எழுதிய "THE REAL TRUTH" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்

www.cfcindia.com/tamil/

இதுவே மெய்யான சத்தியம் 7. இரட்சிப்பைப் பற்றிய மெய்யான சத்தியம்

"இயேசு" என்ற நாமத்திற்கு "இரட்சகர்" என அர்த்தமாம். அவர் ஜனங்களின் பாவங்களிலிருந்து அவர்களை மீட்டு இரட்சிக்கும்படியாக இந்த பூமிக்கு வந்தபடியால்தான், இந்த நாமத்தை உடையவராய் இருந்தார்.

இரட்சிப்பு மன்னிப்பைக் காட்டிலும் மேலானதாகும்!

இந்த வித்தியாசத்தை தெளிவாக அறிந்து கொள்வதற்கு ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். என்னுடைய வீட்டிற்கு வெளியே உள்ள சாலை பழுது பார்க்கப்பட்டு ஒரு ஆழமான குழியை அங்கே வெட்டி இருக்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். நான் என்னுடைய சிறு பையனைப் பார்த்து,"சாலையில் உள்ள குழியின் அருகே நீ போகக்கூடாது. ஏனென்றால் நீ அதில் தவறி விழுந்து விடக்கூடும்" என எச்சரித்துக் கூறுகிறேன். ஆனால் அவனோ என்னுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் குழியின் அருகே சென்று அதை எட்டிப் பார்க்கிறான்! இப்போது அவன் கால் சறுக்கி குழிக்குள் விழுந்துவிட்டான்!! பத்து அடி ஆழமுள்ள அக்குழியிலிருந்து உதவிக்காக என்னை நோக்கி கூக்குரலிட்டுக் கூப்பிடுகிறான். உதவி செய்வதற்காக நான் குழியின் அருகே வந்தவுடன் அவன் என்னைப் பார்த்து, "அப்பா, உங்கள் கட்டளைக்கு கீழ்ப்படியாததற்காக உண்மையாகவே நான் வருத்தப்படுகிறேன், தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்!" எனக் கூறுகிறான். நான் அவனைப் பார்த்து, "பரவாயில்லை மகனே, நான் உன்னை மன்னித்துவிட்டேன், குட்பை!" எனக் கூறிவிட்டு திரும்பச் சென்றுவிட்டால் நான் அவனுக்கு என்ன செய்திருக்கிறேன்? ஆம், நான் அவனை மன்னித்துவிட்டேன், அவ்வளவுதான். ஆனால் நானோ அவனைக் காப்பாற்றவில்லை! இரட்சிப்பில், மன்னிப்பைக் காட்டிலும் மேலானவை அடங்கியிருக்கிறது. நான் என் மகனை அவன் விழுந்த குழியிலிருந்து தூக்கி எடுப்பதும் இந்த இரட்சிப்பிற்குள் அடங்கியிருக்கிறது!!

நமக்கும் இவ்வாறு செய்வதற்காகவே இயேசு வந்தார். அவர் நம்முடைய பாவங்களை மன்னித்தால் மட்டும் போதாது! நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை அவர் இரட்சிக்கவும் வேண்டும்!!

இரட்சிப்பை நாம் "கடந்த காலம்; நிகழ்காலம்; எதிர்காலம்" என முக்கால அனுபவமாய் அனுபவித்திட வேண்டும். முதலாவதாக, நாம் பாவத்தின் தண்டனையிலிருந்து இரட்சிக்கப்பட வேண்டும். அதற்கடுத்து பாவத்தின் வலிமையிலிருந்து இரட்சிக்கப்பட வேண்டும். அதன் பின்பு முடிவாக, நாம் பரலோகம் செல்லும் போது பாவ சமூகத்தைவிட்டே இரட்சிக்கப்பட்டுவிடுவோம்!

இரட்சிப்பின் முதல் பகுதி பாவங்களிலிருந்து மன்னிக்கப்படும் கிரியைச் செய்கிறது. இதன் மூலம் நம் கடந்தகால குற்றங்கள் நம்மை விட்டு நீங்கிவிடுகின்றன.

ஆனால் இது மாத்திரம் போதாது. இனிவரும் காலத்திலிருந்து ஓர் உத்தமமான வாழ்க்கை வாழ்வதற்கு தேவனிடத்திலிருந்து இன்னமும் உதவி தேவையாயிருக்கிறது. இதற்காகவே தேவன் தம்முடைய "வல்லமையை" நமக்குத் தருகிறார்!!

தேவ பெலனுக்காக நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் முதல் மூலதனமாயிருப்பது, "தேவனுடைய வார்த்தையே" ஆகும். நாம் சோதனைகளை ஜெயிப்பதற்கு வேதப்புத்தகம் ஓர் வலிமையான ஆயுதமாய் நமக்கு உதவுகிறது. இதனிமித்தமே நாம் ஒவ்வொரு நாளும் தேவனுடைய வசனத்தை வாசிக்கும் பழக்கத்தை உடையவர்களாய் இருக்க வேண்டும். அதனிமித்தம் தேவன் நம்மோடு தம் வார்த்தையின் மூலமாய் பேசி, அன்றாட நம் ஜீவியத்தின் போராட்டங்களைச் சந்திப்பதற்கு நம்மைப் பெலப்படுத்துகிறார்.

தேவ பெலனுக்கென நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது மூலதனமாயிருப்பது, நமக்குள் வந்து வாசமாயிருக்கும் "பரிசுத்தாவியாகிய தேவனே" ஆவார். நம்முடன் தினமும் பேசவும், வாழ்க்கைப் போராட்டங்களுக்குரிய பெலனைத் தரவும், கிறிஸ்துவின் அடிச்சுவடிகளைப் பின்பற்றும் சீஷர்களாய் வாழ்வதற்கு உதவி செய்யவும், பரிசுத்தாவியானவர் நமக்குள் நிரந்தரமாய் வாழ விரும்புகிறார். எனவேதான், பரிசுத்தாவி நம்மைத் தொடர்ச்சியாய் நிரப்பும்படி நாம் தேவனிடம் கேட்க வேண்டும்!!

ஆண்டவராகிய இயேசு இதைகுறித்து கூறுகையில் "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுபவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா" என்றார்.

தேவ பெலனுக்காக நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் மூன்றாவது மூலதனமாய் இருப்பது, "ஏக சிந்தை கொண்ட கிறிஸ்தவர்களோடு கொண்டிடும் ஐக்கியமாகும்."

இருப்பினும் இந்த இடத்தில் நாம் சற்று கவனமாயிருக்க வேண்டியதிருக்கிறது. ஏனென்றால் தங்களைக் "கிறிஸ்தவர்கள்" என அழைத்துக்கொள்ளும் எல்லோரும் உண்மைக்கிறிஸ்துவர்களாய் இருப்பதில்லை. இவ்வாறு பெயரளவில் மாத்திரம் கிறிஸ்துவர்களாய் இருப்பவர்களை நாம் தவிர்த்துவிடல் வேண்டும்! நாமோ, அனுபவபூர்வமான கிறிஸ்துவர்களாய் மாறி, இயேசுகிறிஸ்துவைத் தங்கள் அனுதின வாழ்வில் பின்பற்ற வாஞ்சிப்பவர்களோடு மாத்திரமே ஐக்கியம் கொள்ள நாடவேண்டும்!

கிறிஸ்துவை நம்முடைய இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ளும்போது நாம் தேவனுடைய பிள்ளைகளாய் மாறுகிறபடியால், " பரத்திலிருந்து பிறந்தவர்கள்" என வேதாகமம் நம்மை கூறுகிறது. இப்போது தேவன் நம்முடைய தகப்பனாய் இருக்கிறார்! எந்த உலகத் தகப்பனைப் போலவே , இப்பூமியில் நமது ஆவிக்குரியதும் சரீரத்திற்குரியதுமான எல்லாத் தேவைகளையும் நமக்குத் தருவதற்கு தேவனும் ஆர்வம் கொண்டவராய் இருக்கிறார்.

சர்வ வல்லமையுள்ள தேவனிடம் நாம் பேசுவதும், நம்முடைய ஆவியில் தேவன் பேசுவதுமாகிய "ஜெபிக்கும் சிலாக்கியம்" ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைக்கும் கையளிக்கப்பட்ட ஆச்சரியமான சிலாக்கியங்களில் ஒன்றாகும்.

இன்று அநேக ஜனங்கள் தனிமையில் மெளனமாய் துன்பப்படுகிறார்கள். ஏனென்றால் இவர்களுக்கு தங்கள் வருத்தங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு யாருமே இல்லை! ஆனால் தேவனுடைய பிள்ளைக்கோ, பரலோகத்தில் ஒரு தகப்பன் இருக்கிறபடியால், அவரிடத்தில் தனக்குரிய யாவற்றையும் பகிர்ந்துகொள்ள முடியும். பரலோகத் தகப்பன், இப்பூமியில் நமக்குத் தேவையான யாவற்றையும் தருவார் என நாம் நம்பியிருக்க முடியும்!

இவ்வுலகில் அநேக ஜனங்கள், பிறர் செய்த பில்லி சூனியத்தினாலோ அல்லது செய்வினையினாலோ துன்பம் அனுபவிக்கிறார்கள். நீங்கள் உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்திருப்பீர்கள் என்றால், இதுப்போன்ற சாத்தானுக்குரிய கிரியைகள் உங்களைத் துன்புறுத்த இனிமேலும் முடியாது! உங்களை இரட்சிக்கும்படி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை நீங்கள் கூப்பிடும்போது, உங்கள் மீதுள்ள எவ்வித பில்லி சூனியத்தின் வல்லமையும் "நொடிப்பொழுதில்" "இப்போதே" விரட்டி எறியப்படமுடியும்!

’தேவனுக்குக் கீழ்படிந்திருங்கள்; பிசாசிற்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்’ என்றே வேதம் கூறுகிறது!

தன்னுடைய பிள்ளைகளின் இப்பூமிக்குரிய வாழ்க்கையில் பாடுகளும் பிரச்சனைகளும் இருக்காது என தேவன் வாக்குத் தரவேயில்லை! எந்த மானிடனையும் போலவே பாடுகளையும் பிரச்சனைகளையும் சந்திக்க தேவன் நம்மை அனுமதிக்கிறார்! ஆனால் நாமோ இவ்வித பாடுகளின் மூலமாய் தேவனை மென்மேலும் நெருங்கி அறிந்து கொள்கிறோம். பாடுகளின் ஒவ்வொரு சூழ்நிலையிலும், தேவனுடைய அற்புதமான உதவியை நாம் ருசிக்கிறபடியால், அவரை அறிந்துகொள்ளுகிற அறிவு நம்மில் வளருகிறது!

அடுத்த அத்தியாயம்


இந்த கட்டுரை சகரியா பூணன் எழுதிய "THE REAL TRUTH" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்

www.cfcindia.com/tamil/

இதுவே மெய்யான சத்தியம் 6. விசுவாசத்தைப் பற்றிய மெய்யான சத்தியம்

"கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்" என வேதாகமம் கூறுகிறது.

நமக்கு உதவியையும் ஆசீர்வாதங்களையும் தரும்படி நம்மை நோக்கி நீட்டும் தேவகரமே கிருபையாகும். தேவனுடைய கரத்தில் இருக்கும் உதவியையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளும்படி நம்முடைய கரத்தை உயர்த்துவதே விசுவாசமாகும்!

தேவன் நல்லவர் என்றும் அவர் உங்களை அளவுக்கடங்காது அன்பு கூறுகிறாரென்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் தன்னுடைய குமாரனாகிய ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரிப்பதற்கு அனுப்பினார் என்றும், மரித்து மூன்று நாட்களுக்குப் பின் தேவன் அவரை உயிரோடே எழுப்பினார் என்றும், அவர் பரலோகத்தில் இன்றும் ஜீவிக்கிறார் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்ஙனம் நீங்கள் விசுவாசித்தால் தேவன் உங்களுக்கு வழங்கும் பாவமன்னிப்பை இப்போதே நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். ஆம், நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை!

நீங்கள் இப்போதே முழங்கால் படியிட்டு உங்கள் கண்களை மூடி கீழ்கண்ட வாக்கியங்களை தேவனிடத்தில் கூறுங்கள்:

"ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே, நான் ஒரு பாவி. நான் மெய்யாகவே என்னுடைய எல்லா பாவங்களிலிருந்தும் திரும்ப விரும்புகிறேன். நீர் என்னுடைய எல்லா பாவங்களுக்காகவும் மரித்து மரணத்திலிருந்து உயிரோடு எழும்பி இன்றும் உயிரோடு இருக்கிறீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். தயவுசெய்து என்னுடைய இருதயத்திற்குள்ளும் ஜீவியத்திற்குள்ளும் தயவாய் வந்து, என் முழு வாழ்க்கைக்கும் இன்றிலிருந்து நீரே ஆண்டவராய் இருந்தருளும். வேறு எல்லா தேவர்களையும் நான் விட்டு விட்டு இப்போதிருந்து உம்மை மாத்திரமே நான் தொழுதுகொள்ள விரும்புகிறேன், ஆமென்."

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கூறுகையில், "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை" என்றார் (யோவான் ௬;௩௭).

சற்று முன்பு ஜெபித்த ஜெபத்தை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடம் உண்மையாய் ஜெபித்தீர்களா?

அப்படியானால் நீங்கள் மெய்யாகவே அவரிடத்தில் வந்துவிட்டீர்கள். இவ்வேளையில், அவர் உங்களைப் புறம்பே தள்ளவில்லை என்ற நிச்சயத்தை நீங்கள் அடைந்திட முடியும். ஆம், அவர் உங்களை ஏற்றுக்கொண்டார்! அவரிடத்தில் கிட்டிச்சேரும் உங்கள் பகுதியை நீங்கள் செய்து முடிக்கும்போது, உங்களை ஏற்றுக்கொள்ளும் தம்முடைய பகுதியை தேவன் செய்துவிட்டார் என்ற நிச்சயத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்!!

நீங்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டீர்களா அல்லது இல்லையா எனபதை அறிவதற்கு உங்கள் உணர்வுகளைச் சார்ந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. உணர்ச்சிகள் நம் சரீரத்திற்கடுத்த காரியங்களுக்கு உரியதாகும். ஆனால் ஆவிகுரிய விஷயங்களுக்கு உணர்ச்சிகள் அதிக வஞ்சகம் நிறைந்ததாகும். நாம் உணர்ச்சிகளை நம்புவதென்பது, ஒரு வீட்டின் அஸ்திவாரத்தை மணலின்மீது போடுவதற்கொப்பாகும். நாமோ நம்முடைய நம்பிக்கையை அல்லது விசுவாசத்தை தேவனுடைய வார்த்தையில் காணப்படும் அவருடைய வாக்குத்தத்தங்கள் மீதே வைத்திட வேண்டும். இதுவே ஒரு கன்மலையின்மேல் கட்டுவதற்கொப்பாகும்!

நீங்கள் தேவனுடைய பிள்ளையாய் மாறிவிட்டீர்கள் என்ற நிச்சயத்தைப் பெற்றவுடன், இந்த மாற்றத்தை மற்றவர்களுக்கும் நீங்கள் அறிக்கை செய்யவேண்டும். இருதயத்தில் நீங்கள் விசுவாசிக்கிறவைகளை நாவினால் அறிக்கை செய்யவேண்டும் என வேதம் கூறுகிறது. உங்கள் நண்பரிடத்திலும், உறவினரிடத்திலும், "கிறிஸ்து என்னுடைய பாவங்களை மன்னித்துவிட்டார்! இப்போது என்னுடைய வாழ்க்கைக்கு அவர் ஒருவரே ஆண்டவர்!!" எனக் கூற வேண்டும்.

இதற்குப் பின்பு, கிறிஸ்துவோடு கொண்டுள்ள உறவை "ஞானஸ்நானத்தின்" மூலமாகவும் அறிக்கை செய்யவேண்டும். நீங்கள் கிறிஸ்துவிடம் உங்கள் இருதயத்தையும், ஜீவியத்தையும் அர்ப்பணித்திட தீர்மானித்த பின்பு துரிதமாய் நீங்கள் ஞானஸ்நானம் பெறவேண்டும். ஞானஸ்நானம் ஒரு மார்க்க சடங்காச்சாரம் அல்ல! அது தேவனுக்கும் மனுஷர்களுக்கும் தூதர்களுக்கும் சாத்தானுக்கும் முன்பாக, "நான் இப்போது இயேசுகிறிஸ்துவுக்கு மாத்திரமே சொந்தம்!" என பகிரங்கமாய் சாட்சி கொடுப்பதாகும்.

ஞானஸ்நானத்தில், இன்னொரு கிறிஸ்தவர், உங்களை முழுவதுமாய் தண்ணீருக்குள் (ஒரு ஆறு அல்லது ஒரு நீர்த்தொட்டியில்) பிதா, குமாரன், பரிசுத்தாவியின் நாமத்தினாலே மூழ்கவைத்து, உங்களை மீண்டும் தண்ணீரிலிருந்து தூக்கிவிடுவார். இந்த மிகச் சாதாரண செயலின் மூலமாக, பழைய மனிதனாய் வாழ்ந்த நீங்கள் மரித்துவிட்டீர்கள், என்ற உண்மையை சாட்சி பகருகின்றீர்கள்! இந்த பழைய மனிதனை, நீங்கள் ஒரு அடையாளமாக தண்ணீருக்குள் மூழ்க வைத்ததன் மூலமாய் "அடக்கம்" செய்துவிட்டீர்கள். தண்ணீரிலிருந்து மீண்டும் வெளியே வந்த நீங்கள், "இன்றிலிருந்து நான் ஓர் புதிய மனிதன் (அதாவது, ஆவிக்குரிய கூற்றின்படி மரித்து மீண்டும் எழுந்தவன்!). புதிய மனிதனாகிவிட்ட நான் இனி தேவனை மாத்திரமே பிரியப்படுத்தி வாழ விரும்புகிறேன்" என உங்கள் நிலையை ஒப்புதல் செய்கிறீர்கள்.

ஆம், நீங்கள் ஒரு பரலோக பிரஜையாகவும், ஒர் தேவப்பிள்ளையாகவும் மாறிவிட்டீர்கள்!!

அடுத்த அத்தியாயம்

இந்த கட்டுரை சகரியா பூணன் எழுதிய "THE REAL TRUTH" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்

www.cfcindia.com/tamil/

இதுவே மெய்யான சத்தியம் 5. மனந்திரும்புதலைப் பற்றிய மெய்யான சத்தியம்

நமக்கு வரவேண்டிய பாவதண்டனையை அவர் தன்மீது ஏற்றுக்கொண்டார். ஆனால் நாம் தேவனிடமிருந்து இந்தப் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ளாதவரை நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அதன் தண்டனையிலிருந்து விடுதலையாக முடியாது!

இவ்வாறு கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாய் தேவன் உங்களுக்காக சம்பாதித்ததை நீங்கள் பெறவேண்டுமென்றால், நீங்கள் முதலாவது உங்கள் பாவங்களை விட்டு மனந்திரும்ப வேண்டும். இதன் உண்மையான பொருள் யாதெனில், நீங்கள் அறிந்திருக்கிற ஒவ்வொரு பாவத்தையும் விட்டுத் திரும்புவதற்கு மெய்யான விருப்பம் கொள்வதேயாகும்.

உங்கள் தீய பழக்கங்களை விட்டுவிடுவதற்குரிய பெலன் உங்களிடம் இல்லாமல் இருக்கலாம். இந்த இடத்திலும் தேவன் உங்கள் பெலவீனத்தை நன்கு அறிந்திருக்கிறார். அதற்குரிய பெலன் உங்களுக்கு இருக்கும் என அவர் எதிர்பார்ப்பதில்லை. அவர் உங்களிடம் எதிர்பார்ப்பதில்லை. அவர் உங்களிடம் எதிர்பார்த்து கேட்பதெல்லாம், "இப்பழக்கங்களையெல்லாம் விட்டுவிடுவதற்கு உனக்கு மனதுண்டோ?" என்ற கேள்வி மாத்திரமே. நீங்கள் மெய்யாகவே ஒவ்வொரு பாவ வழிகளையும் விட்டுவிடுவதற்கு விரும்புவதை தேவன் காணும்போது, நீங்கள் எவ்வளவுதான் எண்ணற்ற தீய பழக்கங்களால் இன்றுவரை தோல்வி அடைந்தவர்களாய் இருந்தாலும், நீங்கள் இருக்கிற வண்ணமாகவே உங்களை அவர் ஏற்றுக்கொள்வார்!!

இது எத்தனை ஆச்சரியமான நற்செய்தி என்பதை எண்ணிப்பாருங்கள்!

நீங்கள் மெய்யாகவே உங்கள் பாவ வழிகளை விட்டுவிடுவதற்கு ஆயத்தமாய் இருக்கிறீர்களா என்பதற்கு, நீங்கள் கடந்த காலத்தில் செய்த தவறுகளை ஒப்புரவாகி சரிசெய்திட விரும்பும் "விருப்பமே" தெளிவான நிரூபணமாகும்.

உதாரணமாய், யாரிடமிருந்தாவது நீங்கள் பணத்தைத் திருடியிருந்தால், அப்பணத்திற்குரிய தொகையை நீங்கள் சேர்த்தவுடன் அதை உடனே திரும்பச் செலுத்துவதற்கு விருப்பம் கொண்டவர்களாய் இருக்க வேண்டும்! நீங்கள் யாரையாவது உங்கள் வார்த்தையினால் மனம் புண்படச்செய்து, அது இப்போது உங்கள் "நினைவிற்கு வந்தால்" நீங்கள் பேசிய வார்த்தைக்காக அவரிடம் நேரடியாகச் சென்றோ அல்லது கடிதம் எழுதியோ மன்னிப்பு கேட்பதற்கு விருப்பம் கொண்டவர்களாய் இருக்க வேண்டும்! இதுப்போன்ற செயல்களின் மூலமாகவே தேவன் நம்முடைய உண்மையையும், தாழ்மையையும் சோதித்து அறிகிறார்.

உண்மையான மனந்திரும்புதலை, "விக்கிரகங்களை விட்டு தேவனிடதிற்கு மனந்திரும்புதல் எனப்பரிசுத்த வேதாகமம் அழைக்கிறது.
சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றை சிருஷ்டிகருக்கு மேலாய் உயர்த்துவதே விக்கரக ஆராதனையாகும். அது பணமோ அல்லது அழகான ஸ்திரீயோ அல்லது நம்முடைய பேர் புகழோ ஆகிய எதுவாகவும் இருக்கலாம்.

மரத்தினாலோ அல்லது கல்லினாலோ அல்லது உலோகத்தினாலோ செய்யப்பட்டவைகளும் விக்கிரகங்களே ஆகும். இவ்வாறு மனிதன் சிருஷ்டித்த ஒன்று, அவர்கள் ஆராதிக்கும் தேவனாய் மாறுகிறது! அண்டசராசரத்தையும் சிருஷ்டித்த சிருஷ்டிகரை ஒரு தொலை நோக்கு சாயலாகக்கூட எந்த மனிதனும் தன் கரங்களால் வடிவமைத்திட முடியாது!

எனவே மனந்திரும்புதல், எத்தகைய விக்கிரக ஆராதனையிலிருந்தும் திரும்புவதை உள்ளடக்கியதாய் இருக்கிறது. உண்மையான மனந்திரும்புதல், சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றையும் விட்டு விட்டு தேவனிடத்தில் திரும்பி, "சர்வ வல்லமையுள்ள தேவனே! நீர் ஒருவரே தொழுகைக்கும் ஆராதனைக்கும் பாத்திரர். இந்நாள்வரை, சிருஷ்டிக்கப்பட்டவைகளை நான் தொழுது கொண்டதற்காக மிகவும் வருத்தம் அடைகிறேன்.

இன்றிலிருந்து என் வாழ்வில் நீர் மாத்திரமே எனக்கு எல்லாவற்றிலும் மேலானவர்" என நாம் கூறுவதாய் இருக்கவேண்டும்!

மனந்திரும்ப வேண்டும் என்பதற்காக, நம்முடைய வேலைகளை அல்லது குடும்பத்தை விட்டு ஏதாகிலும் காடு அல்லது மலைக்குச் சென்று சந்நியாசியாக மாறவேண்டும் என்பது பொருளாகாது. அப்படி இல்லவே இல்லை! நாம் யாவரும் நம்முடைய பிழைப்பிற்காக சம்பாதிக்கவும், குடும்பங்களை உடையவர்களாய் இருக்கவுமே தேவன் விரும்புகிறார்! பணம் சம்பாதிப்பது ஒரு பாவமல்ல. ஆனால் தேவனைக் காட்டிலும் பணத்தை அதிகமாய் நேசிப்பதே பாவமாகும்!

திருமண கட்டுக்கோப்பிற்குப் புறம்பே கொள்ளும் எவ்வித பாலிய உறவுகளும் பாவமே ஆகும். ஆகவே, நம்முடைய எல்லா பாலியத்தின் பாவங்களுக்காக மனந்திரும்பவும், அதைவிட்டு விட்டு தேவனிடம் உண்மையான மனதோடு ஒப்புரவாக வேண்டியதும் மிக அவசியமாக இருக்கிறது!

நாம் மனந்திரும்பி விட்டுவிட வேண்டிய மற்றொரு பாவம்யாதெனில், பிறரை மன்னிக்க முடியாதசுபாவமே ஆகும். தேவன் உங்களுடைய எல்லா பாவங்களையும் மன்னிப்பதற்கு நீங்கள் விரும்பினால், உங்களுக்கு ஏதாகிலும் ஒரு வகையில் தீங்கு செய்த யாராயிருந்தாலும் அவர்களை நீங்களும் மன்னிப்பதற்கு விருப்பம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். தேவன் உங்களுக்கு எவைகளைச் செய்தாரோ அவைகளை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யவேண்டும். இவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் தேவனும் உங்களை மன்னித்திட மாட்டார்!

ஆண்டவராகிய இயேசு கூறுகையில், "மனுஶருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்" என உறுதியாகக் கூறினார்.

எவ்வளவு பெரிய அல்லது கொடிய பாவமாயிருந்தாலும் எல்லாப் பாவங்களையும் தேவன் மன்னித்திடமுடியும். ஆனால் நாம் மாத்திரம் அவைகளிலிருந்து மனந்திரும்பியிருக்க வேண்டும்!

அடுத்த அத்தியாயம்

இந்த கட்டுரை சகரியா பூணன் எழுதிய "THE REAL TRUTH" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்

www.cfcindia.com/tamil/

இதுவே மெய்யான சத்தியம் 4.மன்னிப்பைப் பற்றிய மெய்யான சத்தியம்

நம்முடைய பாவங்களை தேவன் எவ்வாறு மன்னித்திட முடியும்?

தேவன் நீதிபரராயிருக்கிறபடியால், ஒரு மனிதனை மன்னிப்பதற்கு அவனுடைய பாவங்களைக் கண்டும் காணாததுபோல் இருந்துவிட அவரால் முடியாது! பாவம் எவ்வகையிலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். ஆனால் அவர் அன்புள்ள தேவனாயும் இருக்கின்றபடியால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கென ஓர் வழியை உண்டுபண்ணி வைத்திருக்கிறார்!!

எல்லா மதங்களுமே நாம் நல்லவர்களாயும், அன்புள்ளவர்களாயும், உண்மையுள்ளவர்களாயும் இருக்கும் படி போதிக்கின்றன. ஆனால் "அவை அனைத்தும்" நம்முடைய பாவங்களுக்குரிய மன்னிப்பைப் பெற்ற பிறகு நாம் வாழும் வாழ்க்கையே ஆகும்.

தேவன் நம்முடைய பாவங்களை மன்னிக்கவேண்டுமென்றால், அதற்கென அவர் ஏதாகிலும் செய்யவேண்டியதாய் இருந்தது. உலகத்தை சிருஷ்டிக்கும்போது தேவன் ஒரே ஒரு வார்த்தை மாத்திரம் பேசினார், உடனே உலகம் தோன்றியது! ஆனால் ஒரே ஒரு வார்த்தை மாத்திரம் பேசி நம்முடைய பாவங்களை மன்னித்திட அவரால் முடியவில்லை!!

ஆம், தேவன் நம்மைப் போன்ற மனிதனாக வேண்டியதிருந்தது. நாம் மானிடர்களாய் சந்திக்கும் சோதனைகளுக்கும் பாடுகளுக்கும் ஊடாய்ச் சென்று அவர் வாழ வேண்டியதிருந்தது. மேலும், நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை தன் மீது சுமந்து நம்முடைய இடத்தில் ஓர் பலியாக அவர் மரிக்க வேண்டியதிருந்தது!!

நம்முடைய பாவங்களுக்கான தண்டனை, துன்பமோ அல்லது வியாதியோ அல்லது வறுமையோ அல்லது இவ்வுலகத்தில் வந்து தாழ்ந்த சமுதாயத்தில் பிறப்பதோ அல்லது இதுபோன்ற வேறெதுவுமோ இல்லை! நித்திய மரணமே அத்தண்டனை ஆகும்!! இந்த மரணம் தேவனை விட்டு நிரந்தரமாய் பிரிந்திருப்பதற்கு ஒப்பாகும். சரீர மரணத்தின் மூலம் நம் சரீரத்தைவிட்டு நாம் பிரிவதைப் போலவே, ஆவிகுரிய மரணத்தின் மூலம் சர்வ ஜீவனுக்கும் ஊற்றாகிய தேவனைவிட்டு பிரிவதாயிருக்கிறது!

இனிவரும் எதிர்காலத்தில் நீங்கள் செய்திடப்போகும் நற்கிரியைகள், கடந்த காலத்தில் நீங்கள் செய்த தீமைகளை ஒருபோதும் நிவர்த்தி செய்யவே முடியாது! நாம் எப்படியாவது தேவனுடைய சமூகத்தை அடைவதற்கு ஒரு வழிகூட இல்லை. ஆம், நாம் ஓர் நம்பிக்கையற்ற இழப்பையே அடைந்துவிட்டோம்!

ஆனால் தேவன் தம்முடைய மிகுந்த அன்பினிமித்தம் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு ஓர் வழியை உண்டுபண்ணி வைத்திருக்கிறார்.

பாவத்திற்காய் நித்திய தண்டனை அடைவதிலிருந்து மனுவர்க்கத்தை இரட்சிப்பதற்காக பிதாவாகிய தேவன், இயற்கைக்கு அப்பாற்பட்ட பரிசுத்தாவியின் வல்லமையினால், ஒரு கன்னியின் மூலமாய் தன்னுடைய குமாரன் ஒரு பாலகனாய் பிறக்கும்படி, சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு இவ்வுலகிற்கு அனுப்பினார். அவருக்கு இயேசுகிறிஸ்து எனப் பெயர் தரப்பட்டது. இவர் மானிடர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையினாலும் சோதிக்கப்பட்டு, தன் பிள்ளைப் பருவத்திலிருந்து புருஷ பருவத்திலிருந்து வளர்ச்சியடைந்தார். அவர் சந்தித்த எல்லா சோதனைகளிலும் வெற்றி சிறந்தார்! ஆம், அவர் ஒரு போதும் பாவம் செய்யவே இல்லை!!

தன் குமாரனகிய இயேசுகிறிஸ்து 33 1/2 -வயதாய் இருக்கையில் பொல்லாத மனிதர்களால் பிடிக்கப்பட்டு ஒரு சிலுவையில் அறையப்படுவதற்கு பிதாவாகிய தேவன் அனுமதித்தார். அந்த சிலுவையின்மேல் அவர் நமக்காக சாபமாகி, மானிடர்களின் பாவ தண்டனையைத் தன்மீது ஏற்றுக்கொண்டார். இங்குதான் தேவனுடைய ஒப்பற்ற அன்பை நாம் காண்கிறோம்!

இயேசுகிறிஸ்து தம்முடைய இரத்ததை சிந்தி சிலுவையில் மரித்தபோது, நம்முடைய பாவங்களுக்கான நீதியின் தண்டத்தொகை முழுவதுமாய் செலுத்தப்பட்டுவிட்டது. ஆம், நீதியின் தேவை சரிக்கட்டப்பட்டு விட்டது!

சிலுவையில் இயேசுகிறிஸ்து புரிந்த தியாகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை இவ்வுலகிற்கு நிரூபிப்பதற்காக அவர் அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாளில் தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.

ஒரே ஒரு தேவன்தான் இருக்கிறார் என்பதும், இந்தப் பூமியில் தேவனுடைய ஒரே ஒரு மானிட அவதாரம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துதான் என்பதும் இரண்டு உண்மைகளால் நிரூபணமாகிறது.

1.உலகத்தின் பாவங்களுக்காக மரித்த ஒரே ஒருவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மாத்திரமே!

2.மரணத்திற்கு பின்பு மீண்டும் உயிருடன் எழுந்து இனி ஒரு போதும் மரிக்காதவராய் இருக்கும் ஒரே ஒருவர், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மாத்திரமே! இதன் மூலமாய், அவர் மனிதனின் மிகப்பெரிய எதிரியாகிய மரணத்தை ஜெயித்துவிட்டார் என்பதை நிரூபித்தார்!!

உயிர்த்தெழுந்து, இப்பூமியில் 40 நாட்களுக்குப்பிறகு, இன்று அவர் இருக்கும் பரலோகத்திற்கு இயேசு திரும்பச் சென்றார். அவ்வாறு திரும்பிச்செல்லும்போது, இவ்வுலகத்தை நியாயம் தீர்த்து அதை நீதியாலும் சமாதானத்தாலும் ஆளுகை செய்வதற்கு ஒருநாளில் மீண்டும் திரும்ப வருவேன் எனவும் வாக்குரைத்தார்.

அவர் இந்த பூமிக்கு வருவதற்கு முன்பாக, தேவன் இயேசு கிறிஸ்துவுக்குள்ளாய் வழங்கும் பாவமன்னிப்பை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டியது எத்தனை அவசியமாய் இருக்கிறது!!

அடுத்த அத்தியாயம்

இந்த கட்டுரை சகரியா பூணன் எழுதிய "THE REAL TRUTH" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்

www.cfcindia.com/tamil/

இதுவே மெய்யான சத்தியம் 3. மனசாட்சியைப் பற்றிய மெய்யான சத்தியம்

நாம் யாவரும் ஓர் மனசாட்சியுடன் சிருஶ்டிக்கப்பட்டிருக்கிறோம். நாம் குணாதிசயம் படைத்தவர்கள் என்பதை இந்த மனசாட்சிதான் நம்மை எப்போதும் நினைவுறுத்துவதாய் இருக்கிறது. இந்த மனசாட்சி நமக்குள் தேவனுடைய சத்தமாய் இருந்து, "நம் ஒவ்வொரு செயலுக்கும் நாமே பொருப்பாளிகள்" எனப் பேசுகிறது. ஆகவே, நாம் வாழ்ந்த முழு ஜீவியத்தைக் குறித்தும் ஒருநாளில் நாம் தேவனுக்கு கணக்கு ஒப்புவித்தே தீர வேண்டும்!

மனசாட்சி ஏதுமில்லாத மிருகங்களைப் போல் நாம் இல்லை. அவைகள் குணாதிசயம் கொண்டவைகளாய் இராதபடியால் யாதொன்றைக்குறித்தும் தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவைகளுக்கு எல்லாமுமாய் இருக்கிறது. அவைகள் மரித்தவுடன் மரணமே அவைகளுக்கு முற்றுப் புள்ளியாய் முடிகிறது. ஆனால் நமக்கோ இதுப்போன்ற நிலை இல்லை. மனிதன் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டு ஓர் நித்தியவாசியாய் இருக்கிறான்.

நமக்கு கடைசிநாளின் நியாயந்தீர்ப்பு என ஒன்று இருக்கிறது. அச்சமயம் நம் வாழ்வில் நாம் செய்த பேசிய, சிந்தித்த யாவும் நம் நினைவிற்கு மீண்டுமாய் கொண்டுவரப்படும். அன்று நம் முழு ஜீவியமும் தேவனால் கணக்கு பார்க்கப்படும். பின்பு அவர் வேதாகமத்தில் சொல்லப்பட்ட தம்முடைய பரிசுத்த பிரமாணங்களின் தரத்தின்படி நம்மை நியாயந்தீர்ப்பார் அவ்வேளையில் நம் ஒவ்வொரு சிந்தை, வார்த்தை மற்றும் செயலுக்காகவும் தேவனிடம் பதில் சொல்லியாகவேண்டும்!

"ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனுஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது" என வேதாகமம் கூறுகிறது.

‘மனசாட்சி’ தேவன் மனிதனுக்கு வழங்கிய ஒரு ஒப்பற்ற வரமாகும். இந்த வரம் நம்முடைய சரீரத்தில் நாம் பெற்றிருக்கும் "வலி" என்ற வரத்திற்கு ஒப்பாகும். நம் சரீரத்தில் நோய் உண்டாவதை அறிவிக்கும் "முதல் சிக்னலாய்" வலி இருக்கிறது!

குஷ்டரோகிகளிடம் உள்ள பிரச்சனைகளில் முக்கியமானதொன்று என்னவெனில் அவர்களுக்கு வலி இல்லாது இருப்பதுதான். குஷ்டரோகம் நரம்புகளைக் கொன்றுவலிக்குரிய எல்லா உணர்ச்சிகளையும் அழித்துவிடுகிறது. ஒரு குஷ்டரோகியின் பாதத்தில் ஒரு ஆணி குத்தினால்கூட அதை அவன் பல நாட்கள் அறியாதிருப்பான். ஆனால் அவனுடைய பாதமோ சீழ் பிடித்துவிடும். "வலி என்ற ஆசிர்வாதம்" அவனிடம் இல்லாததே காரணமாகும்.

இந்த வலிக்கொப்பாகவே மனசாட்சி இருக்கிறது. நாம் தேவனுடைய பிரமாணங்களை மீறும் போதும், பாவசிந்தனை கொள்ளும்போதும், அல்லது பாவத்தை செய்த பின்பும் இந்த மனசாட்சி நம்மை எச்சரிக்கிறது. இந்த எச்சரிப்புகளை நாம் அலட்சியம் செய்யவோ அல்லது அதை மீறியோ நடந்தால், நாம் கொஞ்சம் கொஞ்சமாய் நமக்குள் இருக்கும் பாவ உணர்வை கொன்றுவிடுவோம். இதுபோன்ற வாழ்க்கையின் முடிவு, நித்திய நித்திய காலமாய் தேவனால் தண்டிக்கப்படுவதே ஆகும்.

இயேசு இந்த மனசாட்சியை "கண்ணிற்கு" ஒப்பிட்டார். நம் கண்ணில் ஒரு சிறிய தூசி விழுந்தாலும், கண் உறுத்தல் உண்டாகி அத் தூசியை நம் கண்ணிலிருந்து நாம் அகற்றும்வரை நம்முடைய எல்லா வேலைகளையும் நிறுத்திவிடுகிறது. இக்கண்ணிற்கு ஒப்பாகவே நம் மனசாட்சியை எப்போதும் சுத்தமுள்ளதாய் நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

நம்முடைய பாவங்கள் தேவனால் மாத்திரமே மன்னிக்கப்பட்டு கழுவப்பட முடியும். நாம் ஏற்கனவே நம் மனசாட்சியில் சுமந்து கொண்டிருக்கும் குற்ற உணர்வை அகற்றுவதற்கு அது ஒன்றே வழியாகும்.

ஆனால், இந்தப் பாவமன்னிப்பு இன்று அநேகர் எண்ணுவதுபோல் மலிவானதொன்றல்ல!

அடுத்த அத்தியாயம்

இந்த கட்டுரை சகரியா பூணன் எழுதிய "THE REAL TRUTH" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்

www.cfcindia.com/tamil/

இதுவே மெய்யான சத்தியம் 2. பாவத்தைப் பற்றிய மெய்யான சத்தியம்

ஒரு மிருகம் எவைகளைக் குறித்து ஆர்வமாய் இருக்கும்? உணவு, உறக்கம், காமதிருப்தி.... அவ்வளவுதான்! இவைகளில் மாத்திரமே ஒரு மானிடனும் ஆர்வம் கொண்டிருந்தால், அவனும் மிருகங்களின் தரத்திற்கு இறங்கி வந்துவிட்டான் என்றே நாம் சொல்லலாம். ஆனால், மனிதன் மிருகங்களைப்போல் இருப்பதற்காக தேவன் அவனை சிருஷ்டிக்கவில்லை. நாம் அவரைப்போல் சீரிய பண்புகளும், நேர்மையுள்ளமும், நற்குணங்களும், சுயகட்டுப்பாடும் கொண்டவர்களும் இருப்பதற்கு நம்மை சிருஷ்டித்தாரே அல்லாமல்.... மிருக உணர்வுகளுக்கு அடிமையாக இருப்பதற்கு அல்ல!!

நாம் மிருகங்களைவிட அறிவுக்கூர்மையும் கல்வி கற்றவர்களாயும் இருப்பதினிமித்தம் மிருகங்களைக் காட்டிலும் நம்மை மேலானவர்களாகக் கருதிவிட முடியாது! ஏனெனில் புத்திக்கூர்மையான கல்வி கற்ற மனிதர்கள், இன்னமும் பேராசைக்கும், சுயநலத்திற்கும், காம இச்சைக்கும், கோபத்திற்கும் அடிமையாகத்தான் இருக்கின்றார்கள்!!

நம் மனதைக் காட்டிலும் ஆழமான ஒரு பகுதி நமக்குள் அடங்கி இருக்கிறது. அது நமக்குள் இருக்கும் ஆவி! நம்முடைய ‘ஆவியே’ தேவனைக் குறித்த உணர்வை நமக்குத் தருகிறது. இந்த உணர்வு எந்த ஒரு மிருகத்திற்கும் இல்லை.

சுயதீனமாய் தெரிந்துக்கொள்ளும் சுதந்திரத்தினிமித்தம் ஏற்படும் அபாயம் யாதெனில், இந்த சுதந்திரத்தை வைத்து நம்மை நாமே பிரியப்படுத்துவதற்கும், தேவனுடைய பிரமாணங்களுக்கு கீழ்படியாமல் இருப்பதற்கும் பயன்படுத்திவிட முடியும். இவ்வாறு இருந்த போதும் தேவன் இந்த விபரீதத்தைச் சந்திக்கத் தயாராயிருந்தார். ஏனென்றால், தேவனாகிய தன்னை சுயாதீனமாய் தெரிந்துகொள்ளும் பிள்ளைகளையே அவர் விரும்புகின்றார்!!

தேவன் சிருஷ்டித்த முதல் மனுஷ்னும் மனுஷியும் ஆதாம் என்றும் ஏவாள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சிருஷ்டிக்கப்பட்டபோது "களங்கம் அற்றவர்களாகவே" இருந்தார்கள். ஆனால் அவர்கள் பரிசுத்தமாய் இருப்பகற்கோ, அதை அவர்கள் தாங்களாகவே தெரிந்துக்கொள்ள வேண்டும்! இந்தத் தெரிந்துகொள்ளுதல் ஏற்படுவதற்காகத்தான் அவர்கள் சோதிக்கப்பட வேண்டியிருந்தது. ஏனெனில் அப்போது மாத்திரமே அவர்கள் ‘தீமையை மறுத்து’ தேவனைத் தெரிந்துகொள்ள முடியும். இதற்காகவே சாத்தான் அவர்களிடம் வந்து, அவர்களைச் சோதிப்பதற்கு தேவன் அனுமதித்தார்! இந்த நிகழ்ச்சியை வேதாகமத்தின் முதலாவது புத்தகமாகிய ஆதியாகமம் 2,3 அதிகாரங்களில் வாசிக்கிறோம்.

முதல் மனுஷனையும் மனுஷியையும் தேவன் சிருஷ்டித்தபோது, அவர்களை அவர் ஒரு தோட்டத்தில் வைத்து, ஒரே ஒரு மரத்தின் கனியைத் தவிர எல்லா மரத்தின் கனிகளையும் புசிக்கலாம் என தேவன் கூறினார். இதுவே அவர்களுக்குத் தரப்பட்ட தெரிந்துகொள்ளுதலின் பரீட்சையாக இருந்தது! இவ்வளவு மிக எளிய கீழ்ப்படிதலின் பரீட்சையில் ஆதாமும், ஏவாளும் தோல்வி அடைந்தார்கள்! எப்படியெனில், சாத்தான் அவர்கள் தோட்டத்திற்குள் பிரவேசித்து ஆதாமையும் ஏவாளையும் பார்த்து, "நீங்கள் இவ்விலக்கப்பட்ட கனியைப் புசிக்கும் நாளில் தேவனைப்போல் ஆகிவிடலாம்" எனக் கூறி சோதித்தான். அவ்வேளையில் ஆதாமும் ஏவாளும் சந்தித்த சோதனை, "ஏதோ ஒரு மரத்தின் கனியை புசிப்பதுதானே!" என்ற மிக எளிய சாதாரண விஷயமாய் இருக்காமல், "அவர்கள் விரும்பினால் தேவனைப்போல் மாறிவிடலாம்" என்பதான விபரீதமாய் இருந்தது!

ஒரு காலத்தில் ‘சாத்தான்’ இதுபோன்ற விருப்பத்தையே கொண்டிருந்தான். அந்த விருப்பத்தைத்தான் அவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் விஷம் பாய்ச்சிவிட்டான். இவர்கள் தேவனுக்குக் கீழ்படியாமல் போனதால், அன்று சாத்தான் அடைந்த அதே கதியை அடைந்தார்கள். ஆம், இவர்களும் தேவனுடைய சமூகத்தை விட்டு துரத்தப்பட்டார்கள்!
மேற்சொல்லப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளையும் பரிசுத்த வேதாகமத்தின் முதல் புத்தகமாகிய ஆதியாகமம் 3-ம் அதிகாரத்தில் நாம் தெளிவாக வாசித்தறியலாம்.

மனுவர்க்கத்திற்குள் எவ்வாறு பாவம் தோன்றியது என்பதை இப்போது நாம் தெளிவாக வாசித்தறியலாம்.

தேவனுக்கு மேலாக, நமக்கானவைகளையும் சிருஷ்டிக்கப்பட்டவைகளையும் தெரிந்துகொள்வதே எல்லாப் பாவத்திற்கும் வேராய் இருக்கிறது. அதாவது, தேவனுடைய வழிக்குப் பதிலாக நம் சொந்த வழியைத் தெரிந்துகொள்வதும், தேவனைப் பிரியப்படுத்துவதற்குப் பதிலாக நம்மை நாமே பிரியப்படுத்துவதுமாகும்!

விபச்சாரம் அல்லது கொலை அல்லது திருடுதல் போன்றவைகளைச் செய்வது மாத்திரம் பாவமாகாது. ஆம், பாவத்தின் சரியான விளக்கம் "நாம் நம்முடைய சொந்த வழியை விரும்புவதேயாகும்." பாவம் துவங்குவதை ஒரு சிறு பிள்ளையின் முரட்டாட்டத்திலிருந்து நாம் காண்கிறோம். அந்தப் பிள்ளை வளரும்போது தன் சொந்த வழியில் செல்லவே தீர்மானித்து... தான் விரும்பியதையெல்லாம் மற்ற பிள்ளைகளிடமிருந்து பறிக்கவும் சண்டையிடவும் செய்கிறது!!

பாவம் நம் ஒவ்வொரு நாடி நரம்புகளிலும் ஊடுறுவப் பாய்ந்திருக்கிறது. இப்பாவத்தை மார்க்க அனுசாரங்களைப் போன்ற உபவாசம் மற்றும் ஜெபங்களின் மூலமோ அல்லது புனிதயாத்திரையின் மூலமோ அல்லது சுயக்கட்டுப்பாட்டின் மூலமோ போக்கிவிட ஒருக்காலமும் முடியாது! தேவன் ஒருவரே நம்மை பாவத்திலிருந்து இரட்சிக்க முடியும்!!

ஆனால், "பாவம் இத்தனை தீமையானது" என நாம் உணரும்வரை தேவன் காத்திருக்க வேண்டியதாயிருக்கிறது. யாரெல்லாம் தங்களை நீதிமான்களாகக் கருதுகிறார்களோ அவர்களைத் தான் இரட்சிக்க முடியாது என்ற உண்மையை இயேசு தெளிவுபடுத்தினார். தாங்கள் நோயாளிகள் என்பதை அறிந்தவர்கள் மாத்திரமே ஒரு மருத்துவரிடம் செல்லுவார்கள். இதற்கொப்பாக "நாம் பாவிகள்" என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வதே நம்முடைய முதல் தேவையாயும் இருக்கிறது.

நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும், நாம் அனைவருமே பாவிகள்தான். நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய பரிசுத்த பிரமாணங்களை நம்முடைய சிந்தையிலும், வார்த்தையிலும், செயலிலும், மனநோக்கங்களிலும் மீறி பாவம் செய்திருக்கிறோம். ஆம், நாம் தேவனுடைய பரிசுத்த தரத்திலிருந்து வீழ்ச்சி அடைந்துவிட்டோம்.

எய்ட்ஸ் நோயைக் காட்டிலும் பாவம் கொடியதாகும். ஒரே ஒரு வித்தியாசமாக இருப்பதெல்லாம் பாவம் நம்முடைய "ஆத்துமாவிற்கு" அழிவைத் தருகிறபடியால் அந்த அழிவை வெளிப்படையாய் காணமுடிவதில்லை, அவ்வளவுதான்! பாவத்தினால் ஏற்படும் விளைவுகள் எய்ட்ஸ் நோயின் விளைவுகளைக் காட்டிலும் மோசமானதாகும். அது நம் ஜீவியத்தை நாசம் செய்து இப்பூமியில் நம்மை மகிழ்ச்சியற்றவர்களாகச் செய்கிறது. இக்கொடிய பாவத்திலிருந்து நாம் இரட்சிக்கப்படாத பட்சத்தில் பாவம் நம்மை முடிவில் நித்தியத்திலும் அழித்துவிடுகிறது!

அடுத்த அத்தியாயம் 

இந்த கட்டுரை சகரியா பூணன் எழுதிய "THE REAL TRUTH" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்

www.cfcindia.com/tamil/

இதுவே மெய்யான சத்தியம் 1. தீமையைப்பற்றிய மெய்யான சத்தியம்

சகல ஞானத்தினாலும் நன்மையினாலும் நிறைந்த தேவன் சிருஷ்டித்த இவ்வுலகில், எவ்வாறு தீமை தோன்றியது? ஒரு இடம்கூட பாக்கி இல்லாமல் எங்கு பார்த்தாலும் வியாதியும், தரித்திரமும், வருத்தமும், துன்பமும் நிறைந்திருப்பதற்கு காரணமென்ன? இந்நிலையில் உள்ள நமக்கு உதவி செய்ய தேவன் ஆர்வமற்று இருக்கிறாரா? இக்கேள்விகளுக்கெல்லாம் நிச்சயமாய் ஓர் பதில் தேவையாயிருக்கிறது.

பரிசுத்த வேதாகமம் இந்த பதிலை நமக்குத்தருகிறது! இந்த பதிலை நாம் காண்பதற்கு முன்பாக, தேவனைப்பற்றிய சில உண்மைகளில் நாம் தெளிவடைவது நல்லது. பரிசுத்த வேதாகமத்தின் முதல் வசனமே, "ஆதியிலே தேவன்..." என்றே துவங்குகிறது (ஆதி.1:1) தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்தில் உள்ள 66 புத்தகங்களில் ஆதியாகமமே முதல் புத்தகம்! நீங்கள் வாசிக்கும் இச்சிறிய புத்தகத்தில், அடைப்புக் குறியில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் வேதப்புத்தகத்தின் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டும் குறிப்புகளே ஆகும்.

பரிசுத்த வேதாகமம் தேவனைக் குறித்த உண்மையை, அவர் எப்படி நித்திய காலத்திற்கு முன்பாகவே இருக்கிறார் என்பதை விளக்கிக்கூற முற்படாமல், அதை ‘அப்படியே ஏற்றுக்கொள்ளும்’ உண்மையாகவே மிக எளிதாய் நமக்குச் சொல்லுகிறது.

மானிடராகிய நம்மிடம் தனிப்பட்ட விதத்தில் உறவு கொள்ள விரும்பும் ஒருவராகவே வேதாகமம் தேவனை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறது. மனுஷீக ஆள்த்துவங்களைப் போலவே தேவனும் ஓர் மானிடனைப் போல் இருப்பார் என நாம் ஒருக்காலும் எண்ணக்கூடாது. அவர் ஆவியாயிருக்கிறார்; எல்லா விதத்திலும் அவர் முடிவற்ற தன்மை கொண்டவர்; குணாதிசயத்தில் எக்காலத்தும் மாறாதவர்! அவர், சர்வ வல்லமை கொண்டவர்; சர்வமும் அறிந்தவர்; அளவிற்கடங்கா ஞானம் நிறைந்தவர்; எல்லாயில்லா அன்பு நிறைந்தவர்; எல்லையில்லா தூய்மை நிறைந்தவர்!!

தேவனின் எல்லையில்லா அன்பில் சுயநலம் என்பது முற்றிலுமாய் இல்லவே இல்லை. ஆகவேதான் அவர் தன்னுடைய மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பிறருக்கு பகிர்ந்து கொடுத்திட விரும்புகிறார். இதற்காகவே அவர் ஜீவராசிகளை சிருஷ்டித்தார். அந்த சிருஷ்டிப்பில் எல்லாவற்றிற்கும் முதலாக, அவர் இலட்சக்கணக்கான தூதர்களை சிருஷ்டித்து, தன்னுடைய சந்தோஷதையும் அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார்.

இவ்வாறு தோன்றிய தூதர்கள் கூட்டத்திற்குத் தலைவனாக இருக்கும்படி தேவன் ஒரு தூதனை சிருஷத்தார். அவனுடைய பெயர் லூசிபர்!

தேவன் சிருஷ்டித்த வான மண்டல கிரகங்கள் அல்லது மரங்களைப் போல் அல்லாமல், லூசிபருக்கு மற்ற தூதர்களுக்கு "சுயாதீன- சித்தத்தைக்" கொடுத்து தேவன் சிருஷ்டித்தார். இந்த சுயாதீனத்தைப் பெற்ற தூதர்கள் அதைக்கொண்டு தேவனுக்குக் கீழ்படியவோ அல்லது கீழ்படியாமல் இருப்பதற்கோ தாங்களாகவே தெரிந்துகொள்ள முடியும்.

ஒருவன் ‘குணாதிசயம்’ கொண்டவனாக இருப்பதற்கு "சுயாதீன சித்தம்" என்ற தன்மை முதலாவது அடிப்படைத் தேவையாகும். கிரகங்களோ அல்லது மரங்களோ நன்மைசெய்யவும் முடியாது, தீமைசெய்யவும் முடியாது. ஏனென்றால் அவைகளுக்குத் தாங்களாகவே தெரிந்துக்கொள்ளும் சுயதீனம் இல்லாமல் சிருஷ்டிக்கப்பட்டபடியால், இவைகள் தேவனுடைய பிரமாணங்களுக்கு அப்படியே கீழ்படிந்துவிடுகின்றன. இதன் நிமித்தமே இவைகள் தேவனுடைய புத்திரர்களாகவும் இருந்திட முடியாது.

மனிதனையோ தேவன் தன்னுடைய சாயலில் சிருஷ்டித்தார். இதுவே நாம் அவருடைய பிள்ளைகளாய் மாறுவதற்குரிய சாத்தியத்தை நமக்கு வழிவகுக்கிறது. நாம் குணாதிசயம் கொண்டவர்கள் என்பதை நமக்குள் இருக்கும் மனசாட்சியின் சத்தம் நமக்கு நினைவூட்டுகிறது. மேலும் நாம் தேவனுடைய பிரமாணங்களை மீறும் பொழுதெல்லாம், இம்மனசாட்சியின் சத்தம் நம்மை உணர்த்துவிக்கிறதாயிருக்கிறது.

"சுயதீன சித்தம்" "மனசாட்சி" ஆகிய இந்த இரண்டையும் உடையவர்களாகவே தூதர்களும் சிருஷ்டிக்கப்பட்டார்கள்.

இவ்வொப்பற்ற தன்மை கொண்ட தூதர்களுக்குத்தான் லூசிபர் தலைவனாயிருந்தான். ஆனால் இவன் வெகு சீக்கிரத்தில் நல்லதற்ற லட்சியங்களையும் கொண்டிடத் துவங்கினான். இவ்வாறு இங்கிருந்து தான் இவ்வையகத்தில் தீமை முதலாவதாகத் தோன்றியது!

லூசிபரின் சிந்தைகள் நல்லதற்றதாக மாத்திரமல்லாமல், அவைகள் பெருமையின் சிந்தைகளாகவும், முரட்டாட்டத்தின் சிந்தைகளாகவும், அதிருப்தி கொண்ட சிந்தைகளாகவும் இருந்தது.

தீமை முதலாவதாக இருதயத்தில் தோன்றியது என்பதை நாம் நினைவிற்கொள்ளக் கடவோம். ஆரம்ப நிலையில் வெளித்தோற்றமான எவ்வித செயலும் நடைப்பெறவில்லை. அவ்விதமே இன்றும் தீமையானது இருதயத்தில் இருந்தே முளைத்தெழும்புகிறது. இவ்வுலகத்திற்கு தீமையைக் கொண்டுவந்த முதல் பாவம் "பெருமை" என்பதையும் நாம் நினைவிற்கொள்வோமாக!

இந்நிலையில் லூசிபரை தன் உடனடி சமூகத்தை விட்டு கீழே தேவன் தள்ளினார். அக்கணமே இந்த லூசிபர் "சாத்தான்" என அழைக்கப்பட்டான்!

லூசிபரையும் அவனோடு சேர்ந்து முரட்டாட்டம் செய்த தூதர்களையும் தேவன் கீழே தள்ளினார். வீழ்ச்சியடைந்த இந்த தூதர்களே "பெல்லாத ஆவிகள்" அல்லது "பிசாசுகள்" ஆவார்கள். இப்பொல்லாத ஆவிகளே இன்று ஜனங்களை அலைக்கழித்து துன்புறுத்துகின்றன!

ஒருவேளை இப்புத்தகத்தை வாசிக்கும் நீங்கள் கூட பொல்லாத ஆவிகளினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு யாராவது உங்கள் மீது மாந்திரீகமான செய்வினை ஏவுதல் செய்திருக்கலாம். அவ்வாறு இருந்தால், உங்களுக்கென பரிசுத்த வேதாகமம் ஓர் நற்செய்தியை வைத்திருக்கிறது. இப்பொல்லாத ஆவிகளின் தொந்தரவிலிருந்து சம்பூரணமான விடுதலையை நீங்கள் நிரந்தரமாய்ப் பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் இப்புத்தகத்தை கவனமாய் வாசியுங்கள். இவ்வாறு இப்புத்தகத்தை நீங்கள் வாசித்து முடிக்கும் வேளையில், தேவன் உங்களுக்குச் செய்யும் அற்புதத்தை நீங்கள் நிச்சயமாய் காண்பீர்கள்.

இத்தருணத்தில் சிலர், "இவ்வுலகத்தின் எல்லா தீமைகளுக்கும் சாத்தான்தான் காரணமென்றால், சாத்தானையும் எல்லா அசுத்த ஆவிகளையும் தேவன் ஏன் அழிக்காமல் வைத்திருக்கிறார்?" எனற கேள்வியை கேட்கக்கூடும்.

தேவன் விரும்பினால் சாத்தானை ஒரு நொடிப்பொழுதில் நிச்சயமாய் அழித்துவிட முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை! சாத்தானையும் அவனோடிருக்கும் பிசாசுகளையும் அனுமதித்து இருக்க வைத்திருப்பதில் ஓர் தெளிவான நோக்கத்தைத் தேவன் வைத்திருக்கிறார். அவ்வித அவருடைய நோக்கத்தின் ஒரு பகுதியாதெனில், இப்பூமிக்குரிய வாழ்க்கையை மனிதனுக்கு கடினமானதாகவும்; பாதுகாப்பற்றதாகவும்; அபாயம் நிறைந்ததாகவும் செய்வதற்கு சாத்தானையே தேவன் உபயோகப்படுத்துகிறார்.

அது ஏனென்றால் "இதன் மூலமாய்" ஜனங்கள் இப்பூமிக்குரிய சொகுசான வாழ்க்கையினால் ஈர்க்கப்பட்டுவிடாமல், தேவனிடத்தில் திரும்பவும், நித்திய வாழ்க்கையில் அக்கறை கொள்ளவும் செய்கிறார்!

காரியம் இவ்வாறு இருப்பதால், இவ்வுலகத்தில் நமக்கு ஏற்படும் துன்பங்கள், தேவன் நம்மீது கொண்ட அன்பின் சின்னமாகவே இருக்கிறது. இதுவே பரிசுத்த வேதாகமம் நமக்கு வழங்கும் செய்தியாகும்!

இதுபோன்ற உலகத்தில் காணும் தீமைகளைத் தேவன் உபயோகித்து அதன்மூலம் ஜனங்களை அவர்களின் பாவங்களிலிருந்து திரும்பும்படிச் செய்கிறார். இவ்வாறாகவே ஜனங்கள் பரலோகத்தில் உள்ள தங்கள் நித்திய வீட்டைக் கண்டுகொள்ளும்படி தேவன் நடத்துகிறார்!

ஆகவேதான், தேவன் இவ்வுலகத்தில் உள்ள எல்லா தீமைகளையும் மிக எளிதில் அகற்றிவிடக் கூடுமென்றாலும், அவர் அவ்விதமாய் செய்யவில்லை! ஏனென்றால் இத்தீமைகளின் மூலமாகவே தேவன் தம்முடைய மகிமையான நோக்கத்தை நிறைவேற்றி முடிக்கிறார்!!

 அடுத்த அத்தியாயம் 

இந்த கட்டுரை சகரியா பூணன் எழுதிய "THE REAL TRUTH" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்

www.cfcindia.com/tamil/

திங்கள், 5 ஏப்ரல், 2010

வியப்பூட்டும் உண்மைகள்


1. அண்டசராசரத்தைப்பற்றிய வியப்பூட்டும் உண்மைகள்

நிலவை மனிதன் எட்டிவிட்டபடியால், ஏதோ விண்வெளி அனைத்தையும் ஜெயித்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறான்! ஆனால், பரந்து கிடக்கும் விசாலமான விண்வெளி இன்னமும் நம் கற்பனைக்கு எட்டாததாகவே இருக்கிறது!!

உதாரணமாய் சில நட்சத்திரங்களின் தூரத்தை சற்று எண்ணிப்பாருங்கள். நம் கண்களுக்குப் புலப்படும் சமீபமான நட்சத்திரம் "ஆல்ஃபா செண்டவுரி " ஆகும். அந்த நட்சத்திரத்தின் தூரம் 40,000 பில்லியன் கிலோ மீட்டர் ஆகும்! நீங்கள் "ஒளியின் வேகத்தில்" பயணம் செய்தால் சந்திரனை 1 1/2 செகண்டிற்குள் அடைந்துவிடலாம். சூரியனை 8 1/2 நிமிடத்திற்குள் அடைந்துவிடலாம். ஆனால் ஆல்ஃபா செண்டவுரிக்கு சென்றிட 4 1/2 ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டும்!! நாம் தொலைதூர கருவியின் மூலமாய் கூட்டம் கூட்டமான நட்சத்திரங்களைக் காண்கிறோமே....அவைகள் சுமார் 6,500 மில்லியன் ஒளியின் பயண ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளன!!

இப்போது நட்சத்திரங்களின் அளவை சற்று எண்ணிப்பாருங்கள். "ஓரியன் பெல்ட்டில்" அமைந்துள்ள "பெட்டல்கஸ்" என்ற நட்சத்திரத்தின் விட்ட அளவு 500 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். இந்த நட்சத்திரம் வெறும் கூடாக இருந்தால் பூமி அதன் உள்ளேயே சூரியனை தன் வழக்கமான ஓட்டப்பாதையில் சுற்றிவர முடியும். ஏனெனில், சூரியனை பூமி சுற்றிவரும் சுற்றுப்பாதையின் விட்ட அளவு 300 மில்லியன் கிலோ மீட்டர் தூரமே ஆகும்!!

இத்தனை மகத்துவமுள்ள விண்ணகத்து கோள்கள் தங்கள் தங்கள் ஓட்டப்பாதையில் எத்தனை நேர்த்தியாய் பிழையேதுமில்லாமல் சுற்றி வருகின்றன என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாய் இந்த அண்ட சராசரங்களுக்குப் பின்பாக ஓர் "மகா உன்னத அறிவுக்கூர்மை" இருக்கத்தான் செய்கிறது. அம் மகத்துவ அறிவுகூர்மையே ஒவ்வொரு நட்சத்திரத்தையும் , கிரகங்களையும் திட்டம் வகுத்து படைத்திருக்கிறது!!

விண்ணின் விரிவுதான் எத்தனை விசாலமாயுள்ளது! மனிதனோ எத்தனை சிறியவன்!! பரிசுத்த வேதாகமத்தில், "நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கு அவன் எம்மாத்திரம்!" என தாவீது இராஜா என்பவர் எழுதி வைத்துள்ளார்.

ஒரு பொருளின் மதிப்பை அதன் ’அளவை" வைத்து மதிப்பிட முடியாது. ஒரு கோடீஸ்வரனுக்கு ஏராளமான ஏக்கர்கள் நிலம் இருக்கலாம். ஆனால், அவ்வளவு பெரிய நிலத்தைக் காட்டிலும் வீட்டில் இருக்கும் அவனுடைய சிறு குழந்தையே அவனுக்கு விலையேறப்பெற்ற பொக்கிஷம் ஆகும்! இதைப் போலவேதான் தேவனுக்கும் உள்ளது. விண்வெளி பரந்து விரிந்ததாய் இருக்கலாம். நட்சத்திரங்கள் மகாப் பெரிய அளவுடையதாக இருக்கலாம். ஆனால் தேவனோ, தான் படைத்த எதைக் காட்டிலும் மனுஷனையே அதிகமாய் நேசித்து அக்கறை காட்டுகின்றார். தேவனோடு மனிதன் ஐக்கியம் கொள்வதற்கென்றே, அவன் தேவனுடைய பிள்ளையாக சிருஷ்டிக்கப் பட்டான். இவ்வாறு தேவனோடு கொண்டிடும் ஐக்கியமே, நாம் இப்பூமியில் வாழும் நோக்கத்தை அர்த்தமுள்ளதாகச் செய்கிறது!!

2. மனிதனைப்பற்றிய வியப்பூட்டும் உண்மைகள்

தேவனுடைய படைப்பில், மனிதனே கிரீடமாக விளங்குகிறான். வானவிரிவில் காணும் நட்சத்திரங்களின் வியப்பைக் காட்டிலும் அதிக வியப்புடையது மனிதனே ஆவான்! முதலாவது உங்கள் சரீரத்தைப் பார்த்து, அதை தேவன் எத்தனை ஆச்சரியமாய் சிருஷடித்திருக்கிறார் என்பதைப் பாருங்கள்.

உங்கள் இருதயத்தை சற்று நோக்குங்கள்! ஒரு வருடத்தில் எவ்வித விடுமுறையும் இல்லாமல் உங்கள் இருதயம் 40 மில்லியன் தடவை துடிக்கின்றது! ஒவ்வொரு நாளும் உங்கள் தலையிலிருந்து பாதம் வரைக்கும் இரத்தத்தை 100,000 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இரத்தக் குழாய்களின் மூலம் செலுத்துகிறது! ஒவ்வொரு நாளும் சேதமடைந்து அழிந்து போகும் சிவப்பு இரத்த அணுக்களுக்குப் பதிலாய் உங்கள் சரீரம் 172-பில்லியன் அளவிற்கும் மேலான சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்கின்றது. காரியம் இவ்வாறு இருப்பதால், இன்று நீங்கள் உயிரோடு வாழ்வதே ஓர் மகா அற்புதமல்லவா!

இவ்வாறு மனிதனின் வியக்கத்தகு சரீரத்தைக் காட்டிலும், இன்னமும் அவனுள் காணப்படும் மாபெரும் விந்தை யாதெனில், அவனுக்குள் ஓர் ஆவி உள்ளது! இத்தன்மையே படைப்புகளுக்கெல்லாம் சிகரமாய் நம்மை விளங்கச் செய்கின்றது. நம் ஆள்த்துவத்தின் ஆழத்திற்குள் அடங்கியிருக்கும் இந்த ஆவியே, "தேவன் ஒருவர் உண்டு" என நமக்கு உணர்த்துகிறது.

மானிடர்களுக்குள் இருக்கும் ஆவி, தாங்கள் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய ஓர் சர்வ வல்ல கர்த்தா இருக்கிறார் எனக் கூறுவதைக் கேட்கிறபடியால், ஏதாவதொரு வஸ்துவை தெய்வமாக வணங்குகிறார்கள் இவ்வித ஆவிக்குரிய கணக்கு ஒப்புவிக்கும் இயல்பான உணர்வு எந்த மிருகத்திற்கும் கிடையாது! தன் நடத்தைக்குரிய குற்ற உணர்வை மனிதன் மாத்திரமே உணர முடியும். ஏனெனில் அவன் ஒருவனுக்கே ஓர் மனசாட்சி உள்ளது!! இவனைப் போல ஓர் "பக்தியுள்ள குரங்கையோ" அல்லது ஆவிக்குரிய சிந்தை கொண்ட "ஓர் நாயையோ" நீங்கள் ஒருக்காலும் கண்டுபிடித்திட முடியாது!

ஆம், மனிதன் ஓர் நித்திய ஜீவராசியாவான்! மனிதனே தேவனுடைய படைப்பில் கிரீடமாய் திகழ்கிறான். அவன் தேவனோடு ஐக்கிய உறவு கொள்வதற்கே சிருஷடிக்கப்பட்டவன்!

3. மெய்யான புரட்சிபற்றிய வியப்பூட்டும் உண்மைகள்

இன்றைய உலகில் "புரட்சி" என்ற வார்த்தை மிகச் சாதாரணமாய் பயன்படுத்தப்படுகின்றது! நம் எல்லோருக்குமே தேவையான ஓர் புரட்சியைக் குறித்து சற்றே தியானிப்போம். நாம் எல்லோருமே நம் பெற்றோர் களிடமிருந்து ஓர் மதத்தை சுதந்தரித்திருக்கிறோம். அவ்வாறு சுதந்தரித்த மதத்தோடுகூட சில தவறான கருத்துக்களையும் நாம் பெற்றிருக்கிறோம். தொன்று தொட்டு இவ்வாறு நாம் பெற்றிருக்கும் தவறான கருத்துக்களே, நாம் சிறு பிராயத்திலிருந்து கற்றவைகளை கேள்விக்கு உட்படுத்துவதற்குப் பெரும் தடையாய் உள்ளது!.

ஒரு உதாரணத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள் : பல ஆயிரம் வருடங்களாய், பூமியை மையமாகக் கொண்டே அண்ட சராசரங்களும் இயங்குகின்றன என்றும், சூரியனும் நட்சத்திரங்களும் பூமியைச் சுற்றி சுற்றி வருகின்றன என்றும் மனிதன் நம்பி இருந்தான். ஆனால் சுமார் 450 வருடங்களுக்கு முன்பாக ‘கோப்பர்னிகஸ்’ என்ற பெயர் கொண்ட மனிதன், தன் மூதாதையரின் நம்பிக்கையை கேள்வி தொடுத்து, அதை தவறு என்றும் நிரூபித்துக் காட்டினான்! ஆனால் அந்தோ! மார்க்க உலகில் மாத்திரமே, தங்கள் பெற்றோர்களும் குருமார்களும் கற்றுத் தந்தவைகளை ஜனங்கள் கண்மூடித்தனமாய் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்! உங்களைக் குறித்து என்ன? உங்கள் மார்க்ககோட்பாடுகள் யாவை? அவைகள் உங்கள் மூதாதையரிடமிருந்து கண்மூடித்தனமாய் சுதந்தரிக்கப்பட்டவைகளா? அல்லது, தெய்வத்தைப்பற்றியும், நித்தியத்தைப்பற்றியும் நீங்களாக சிந்தனை செய்து, அதைப்பற்றிய உணர்த்துதல்களை "மெய்யானது" என உறுதியாய் பற்றியிருக்கிறீகளா?

இவ்வுலகில் இதுவரை நாம் கண்ட எந்தப் புரட்சியாளரைக் காட்டிலும் இயேசுகிறிஸ்துவே மகா மேன்மையானவர்! ஏனென்றால், அவர் ஒருவரே மனிதனின் உள்ளான அந்தரங்கத்தில் மாறுதலைக் கொண்டு வரும்படி இப்பூமிக்கு வந்தார்! இவ்வித அந்தரங்க மாறுதலின் புரட்சியை தன் வாழ்வில்ருசிக்கும் மனிதனின் வெளியரங்க ஜீவியமும் புரட்சியான மாறுதலடையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை! ஆம், பிரச்சனைகளுக்கெல்லாம் காரணமான வேரிலிருந்துதான் மாற்றங்கள் (புரட்சி) எற்பட நமக்கு அவசியமாயிருக்கிறது.


4. நம் தேவையைப்பற்றிய வியப்பூட்டும் உண்மைகள்

மனிதனின் மிகப் பெரிய தேவை எது? உணவா? உறைவிடமா? வேலைவாய்ப்பா?
இவ்வாறு ஒரு மனிதன் தன் முழு வாழ்க்கைக்கும் தேவையான உணவும், உறைவிடமும், உத்தியோகமும் பெற்று....அவன் மரித்தவுடன் இனி என்ன சம்பவிக்கும்? மனிதனின் ஜீவியத்திற்கு மரணம்தான் முற்றுப்புள்ளியா? இல்லவே இல்லை!

இப்பூமியில் நாம் வாழும் வாழ்க்கை நித்தியத்திற்குள் பிரவேசிக்கும்படி அளிக்கப்பட்ட ஓர் அறிமுகமேயாகும். ஓர் பரீட்சைக்காகவே நாம் இப்பூமியில் வைக்கப்பட்டு இருக்கிறோம்..... அதை தேவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். நம் ஒவ்வொரு வருடைய ஜீவியத்தின் உண்மைநிலையை தேவன் அறிவார்! நல்லவர்களைப்போல் நம்முடைய நண்பர்களுக்கு முன்பாய் நடித்துவிடலாம், ஆனால் தேவனை நாம் ஒருக்காலும் ஏமாற்றிட முடியாது!! தேவனுடைய கண்களுக்கு முன்பாக நாம் அனைவரும் அவருடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தானத்தை விட்டு மிக மிக குறைவுபட்டிருக்கிறோம். ஆகிலும், மனிதனோ தேவனோடு ஐக்கியப்படுவதற்கென்றே சிருஷ்டிக்கப்பட்டான். இதுவே இன்று மனிதனின் மிகப் பெரிய தேவையாயிருக்கிறது!!

காரியம் இப்படியாய் இருப்பதால், நம்முடய பாவ குற்ற உணர்வு நம்மைவிட்டு எவ்விதம் நீங்க முடியும்?
இதற்கென நம்முடைய பாவங்களுக்காக வருத்தம் அடைந்தால் மட்டும் போதாது. நான் செய்த ’வங்கிக் கொள்ளைக்காக’ குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிற்பதாக வைத்துக் கொள்ளுங்கள். நீதிமன்றத்தின் நியாயாதிபதியாக என் தந்தை அங்கு நிற்கிறார். அவருக்கு முன்பாக நான் என்னுடைய கொள்ளை குற்றத்திற்காக வருத்தப்படுவதால், அதைக் கண்டு என் தந்தை என்னை விடுதலை செய்ய ஒருக்காலும் முடியாது. ஓர் தந்தை என்ற ஸ்தானத்தில் அவர் என்னை நேசிக்கலாம்...... ஆனால், அவரோ இப்போது நீதிமன்றத்தில் ஓர் நீதிபதியாக அமர்ந்திருக்கிறார். எனவே என்னதான் நான் வருத்தமடைந்தாலும், என்னதான் என்னை அவர் மகனாக நேசித்தாலும், நான் செய்த குற்றத்திற்காக அவர் எனக்கு தண்டனை கொடுத்தே தீரவேண்டும்!!

இவ்வாறெல்லாம் இருந்தும்கூட நீதிமன்றத்தில் எப்படியாகிலும் உதவியை என் தந்தை எனக்குச் செய்திட முடியும். சட்ட நீதியின்படி எனக்கு 1000,000 ரூபாய் அபராதத் தண்டனையாக தீர்க்கப்பட்டால், என் தந்தை பாடுபட்டு சம்பாதித்த தன்னுடைய 1000,000 ரூபாயை எனக்குத் தந்து, "மகனே, இதோ உன் தண்டனைக்குரிய பணம்! போய் உன் அபராதத்தை செலுத்திவிட்டு தலையாகிவிடு!" என அவரால் கூறிட முடியும். பார்த்தீர்களா, ஒரு நீதிபதியாக இருந்து எனக்கு தணடனை வழங்கினார்..... அதே சமயம், ஓர் அன்புள்ள தகப்பனாய் அத்தண்டனைக்குரிய கிரயத்தை தானே செலுத்திவிட்டார்!!

இச்செயலைத்தான் தேவன் நமக்காக செய்து முடித்திருக்கிறார். ஓர் நீதியுள்ள நீதிபதியான தேவன், நம் பாவங்களுக்காக நம் அனைவருக்கும் "நித்திய மரணத்தை" தண்டனையாக வழங்க வேண்டியிருந்தது. ஆனால், அவர் நம்மை நேசித்தபடியால், இந்த பூமிக்கு இயேசு கிறிஸ்துவாக இறங்கிவந்து தானே அத்தண்டனையை நமக்காக செலுத்தி விட்டார்! ஆம், கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்!!

இத்தனை மகத்துவ செயலுக்குப் பிறகு, இப்போது நாம் செய்ய வேண்டுமென ஒன்று இருக்கிறது! என் தந்தை, நீதிமன்றத்தில் எனக்காக தண்டனை பணத்தை என்னிடம் தரும்போது, அதை நான் பெற்றுக்கொள்ளவில்லை என்றால், நான் நிச்சயமாக விடுதலையாக முடியாது! இதேபோலவே தான் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் தேவன் நமக்கு வழங்கும் பாவ மன்னிப்பு உள்ளது. அதை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்விதமாய் நாம் பெற்றுக்கொள்ளவில்லை என்றால், நாம் ஒருக்காலும் விடுதலையின் பலனை ருசித்திடவும் முடியாது!

5. தீய பழக்கங்களைப்பற்றிய வியப்பூட்டும் உண்மைகள்

உலகமெங்கும் இன்று ஜனங்கள் இன்பத்தையும், புகழையும், செல்வத்தையும், அதிகாரத்தையும் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இவை எல்லாவற்றிற்கும் பின்பாக ஓர் பிரமாணம் அல்லது ஓர் விதி தொடர்புடையதாய் நிற்கிறது. அந்த விதியை அல்லது பிரமாணத்தை "குறைந்து சரிவடையும் சராசரி விகிதம்" எனக் கூறுவார்கள்.

இந்த விதியாகிய பிரமாணம் எவ்வாறு கிரியை செய்கிறது என்பதைக் காண்பதற்கு "இன்பத்தைத் தேடி ஓடுதலை" உதாரணமாய் எடுத்துக் கொள்வோம். துவக்கத்தில், ஒருவன் குறைந்த அளவில் ஈடுபாடு கொள்கையில், அவன் பெறும் இன்பம் ஓரளவு திருப்தியை அவனுக்குத் தரக்கூடும். இவ்வகையான இன்பத்தை அவன், புகையிலை போடுதல், மது அருந்துதல், ராக்மியூஸிக், போதை வஸ்துகள், பாலிய உணர்வைத் தூண்டும் ஆபாச படங்கள், சுபாவத்திற்கு விரோதமான பாலிய உறவுகள், ஆகிய ஒன்றின் மூலம் இவன் பெற்றுக் கொள்கிறான். ஆனால் இவைகளில் ஒருவன் மூழ்கும்போது, தன்னிடம் சிக்கிக்கொண்ட மனிதனை இப்பழக்கங்கள் நழுவவிடாமல் இறுகப் பிடித்துக் கொண்டு முடிவில் அவனைத் தனக்கு அடிமையாகச் செய்துவிடுகிறது! இந்நிலைக்கு வந்து விட்ட ஒருவன், இனி இவ்வித இன்ப உணர்ச்சியின் தூண்டுதல் இல்லாமல் ஜீவிக்க முடியாது என்ற அவலநிலைக்கு ஆளாகிவிடுகின்றான்!

இவ்வாறு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட்ட ஒருவன் "கொல்லனின் இடுக்கிக்குள்" சிக்கிக் கொண்டதைப் போல அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறான்!

"குறைந்து சரிவடையும் சராசரி விகித" விதிப் பிரமாணத்தை, இவ்வுலகின் அந்தஸ்தையும், மேன்மையையும் நாடி ஓடும் எல்லோர் மீதும் தேவனே வைத்திருக்கிறார். இதன் மூலமாய் "தான் ஒரு நித்திய வாசி" என்பதை மனிதன் உணர்வடையும்படிச் செய்கிறார். ஆம், மனிதன், "ஆவிக்குரிய வெற்றிடம்" உடையவனாகவே இருக்கிறான். அவ்வெற்றிடத்தை தேவன் ஒருவரே தவிர வேறெதுவும் நிறைத்திட முடியாது! ஆனால், மனிதனோ அவ்வெற்றிடத்தை இன்பம், புகழ், செல்வாக்கு, அதிகாரங்கள் ஆகியவற்றால் நிரப்பிவிட தொடர்ச்சியாய் முயற்சி செய்து கொண்டேயிருக்கிறான். அம்முயற்சி, நிச்சயம் பலனளிக்கப் போவதில்லை! ஏனென்றால், "மனிதனின் இருதயத்திற்குள் தேவன் நித்தியத்தை வைத்திருக்கிறார்" என்றே பரிசுத்த வேதாகமம் பறை சாற்றுகின்றது. ஆகவே, நம்முடைய இருதயம் தேவனிடம் இளைப் பாறுதலைக் காணும் வரை அவ்விருதயத்தில் எப்போதும் இளைப்பாறுதலற்ற சஞ்சலமே குடியிருக்கும்!

எவ்வாறு ஒரு குவளையில் நல்ல பானத்தை ஊற்றுவதற்கு முன்பாக அக்குவளை சுத்தமாக்கப்பட வேண்டியது அவசியமோ, அதைப்போலவே நம் இருதயம் சிருஷடி கர்த்தர் தங்கும் ஸ்தலமாய் மாறுவதற்கு முதலில் அந்த இருதயத்திலுள்ள எல்லா பாவங்களும் கழுவப்பட வேண்டியது அவசியமாயிருக்கிறது.

இவ்வாறு நம்முடைய இருதயம் பாவத்திலிருந்து கழுவப்பட்டு, சுத்தமாகி, அதில் தேவன் வந்து தங்க வேண்டும் என்பதற்காகவே, நம் ஒவ்வொருவருடைய பாவங்களுக்காகவும் கிறிஸ்து மரித்தார்!

6. நியாயத்தீர்ப்புநாளைப்பற்றிய வியப்பூட்டும் உண்மைகள்

இப்பூமியில் நம்முடைய வாழ்க்கையானது மரணத்தை நோக்கி 10, 9, 8.... என ஒவ்வொரு எண்ணாக குறைந்து வருவதற்கு ஒப்பாய் இருக்கிறது ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை குறைந்து குறைந்து........ முடிவில் நாம் மரித்து, நம் சரீரத்தைவிட்டுப் போகும் நாள் வரைக்கும் எண்ணப்படுகின்றது! ஆனால், அதற்குப் பிறகு என்ன?

நம்முடைய மரணத்திற்குப் பிறகு நம் ஒவ்வொரு வருடைய ஜீவியத்தைக் குறித்ததான கணக்கை நாம் தேவனுக்கு ஒப்புவிக்க வேண்டும் என பரிசுத்த வேதாகமம் திட்டமாய் கூறுகிறது. இந்த பூமியில் வாழ்ந்த கோடானு கோடி மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் செய்த, பேசிய, சிந்தித்த, ஒவ்வொன்றையும் இறைவன் எப்படி பதிவுசெய்து வைக்க முடியும்? என்று நாம் ஆச்சரியப்படக்கூடும்! ஆம், இந்த பதிவை இறைவன் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் "ஞாபக சக்தியிலேயே" வைத்திருக்கிறார்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இந்த ஞாபக சக்தி நாம் செய்கிற, பேசுகிற, நினைக்கிற ஒவ்வொன்றையும் அப்படியே பதிவு செய்கிற ’வீடியோ டேப்’ போன்றதாகும். ஒருவன் மரிக்கும்போது, அவன் தன்னுடைய சரீரத்தை மண்ணுக்கு விட்டுச் சென்றாலும், ஞாபகசக்தியை உள்ளடக்கிய ஆத்துமாவானது மரித்த ஆவிகள் இருக்கும் இடத்திற்குப் போகிறது. கடைசியில், இந்த உலக நியாயத்தீர்ப்பின் நாள் வரும் போது, இறைவனுக்கு முன்பாக தன் முழுவாழ்க்கையின் கணக்கையும் ஒப்புவிக்கும்படி நிற்பான்!

நியாயத்தீர்ப்பு நாளில் நம் பாவ தீய செயல்கள் வீடியோ டேப்பினால் வெளியரங்கமாகாமல், இறைவனின் பார்வையிலிருந்து நிரந்தரமாய் துடைத்து அழிக்கப்பட "ஒரே ஒரு வழிதான்" உண்டு! இறைவனின் சட்டத்தில் பாவத்துக்காக தண்டனை வரையறுக்கப்பட்டுள்ளது என்று வேதாகமம் கூறுகிறது. அது மரணம்!

இந்த நித்திய மாணமாகிய தண்டனையிலிருந்து நம்மைக் காக்கவே, தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து பரலோகத்திலிருந்து இம் மண்ணுலகுக்கு மனிதனாக வந்து 2009 வருடங்களுக்கு முன் ஓர் சிலுவையில் மரித்தார். அங்கே அவர் மனுக்குலத்தின் பாவங்களுக்குரிய தெய்வ தண்டனையை எல்லா மனிதரின் பாவத்திற்காகவும் தன்மீது ஏற்றுக்கொண்டார். அவர் மரித்த மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் மரணத்திலிருந்து உயிருடன் எழுந்து வந்து, உண்மையாகவே தான் தேவகுமாரன் என்பதை நிரூபித்தார். இவ்வாறு மனிதனின் மிகப் பெரிய எதிரியான மரணத்தை ஜெயித்தார்!

இன்று நாம் உண்மையாகவே நம்முடைய பாவங்களை ஒத்துக்கொண்டு, அவைகளைவிட்டு மனந்திரும்பி, இயேசுகிறிஸ்து மூலமாய் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டால், நம்முடைய பாவங்கள் அத்தனையும் மன்னிக்கப்பட்டு "அவைகள்" நமக்குள்ளிருக்கும் ஞாபகசக்தியின் சுருளாகிய ’வீடியோ டேப்பிலிருந்து’ நிரந்தரமாய் அழிக்கப்பட முடியும். ஏனென்றால் இந்த இயேசுவே நமக்காக மரித்து உயிர்த்தெழுந்தவர் ஆவார்!!

மனித வர்க்கத்திற்கென்று நாம் மேற்கண்ட "ஒரே வழியான" இரட்சிப்பைத்தான் இறைவன் நியமித்திருக்கிறார். இந்த வழியைக் கண்டடையாத ஒருவன், நியாயத்தீர்ப்பு நாளில் தனக்குள் பதிவாகி இருக்கும் வீடியோ டேப், தன் பாவங்களைத் திரையிடுவதைக் காண்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்!


7. வியப்பிற்கெல்லாம் சிகரமான வியப்பூட்டும் உண்மைகள்

நாம் அனைவருமே, பாலைவனத்தில் பயணம் செய்து, தவிக்கும் தாகத்தினால் மாண்டுபோகும் ஜனத்திற்கே ஒப்பாயிருக்கிறோம். அந்த ஜனக்கூட்டத்தில் ஒருவர் எங்கேயாகிலும் தண்ணீரைக் கண்டு பிடித்தால், அச்செய்தியை அவர் நிச்சயமாய் மற்றவர்களுக்கும் அறிவிப்பார்! தண்ணீரைக் குடிக்கும்படி அவரால் பலவந்தம் செய்திட முடியாது. ஆனால், மற்றவர்களுக்குத் தண்ணீர் இருக்கும் இடத்தைக் காண்பித்திட முடியும்! இந்த செயலலைத்தான் நாங்கள் உங்களுக்கு இப்போது செய்கிறோம்!! நித்திய ஜீவனை அடைந்திட விருப்பம் கொண்ட யாவர்க்கும், அந்த நித்திய ஜீவன் இலவசமாய் கிடைத்திடும் இடத்தைக் காட்டுகிறோம்.

இவ்வுலகில் வியப்பிற்கெல்லாம் சிகரமான வியப்பூட்டும் உண்மை யாதெனில், மகா கொடிய ஒரு பாவிகூட மெய்யான வாஞ்சையோடு தேவனைத் தேடுவானென்றால் "அடுத்த கணமே" அவன் தேவனுடைய பிள்ளையாய் மாறிவிட முடியும்! என்ற உண்மைதான்!!

தேவன் இயந்திர மனிதர்களை விரும்பவில்லை. அவர் தனக்கு குமாரர்களையே விரும்புகிறார். இந்த காரணத்திற்காகவே நம் எல்லோருக்கும் "ஓர் சுயாதீன சித்தத்தை" தேவன் தந்திருக்கிறார். அவருக்கு கீழ்படிவதையோ அல்லது கீழ்படியாமல் இருப்பதையோ நம் இஷடப்படி நாம் தெரிந்து கொள்ளலாம். நமக்குத் தரப்பட்ட சுயாதீன சித்தத்தை, தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதற்கு நாம் கையாண்டபடியால்தான், நாம் அனைவரும் வழி தவறித் தவிக்கிறோம். பாவம் நம் சொந்த வாழ்க்கையை மாத்திரமல்லாமல் நம் குடும்பங்களையும் அழித்துப் போடுகிறது. இப்பூமியில் நம் வாழ்வை சஞ்சலப்படுத்தும் இந்தப் பாவம் கடைசியாக நம்மை நரகத்திற்கும் நித்திய காலமாய்த் தள்ளிவிடுகின்றது!

ஆனால் இன்றோ, நம்முடைய பாவ வழிகளை விட்டு தேவனிடம் திரும்பி வரும்படியாய் நம் யாவரையும் தேவன் அழைக்கிறார். இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் மூலமாய், நம் கடந்த கால பாவங்களுக்காக பூரண மன்னிப்பைத் தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ளும்படி தேவன் அன்புடன் அழைக்கிறார்!

இந்த கணமே நீங்களும் தேவனுடைய பிள்ளையாய் மாறிவிடுவதற்கு தீர்மானம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை இந்த இரட்சிப்பின் மகத்துவத்தை நீங்கள் உணராதவர்களாய் இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே நீங்கள் எடுக்கப்போகும் தீர்மானம் வாழ்வா அல்லது சாவா என்பதற்குரிய தீர்மானமேயாகும். நீங்கள் இப்போதே தேவனிடம் கீழ்காணும் ஜெபத்தை உங்களால் சொல்லி ஜெபித்திட முடியுமா? ஜெபியுங்கள்...........

"ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே, நான் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவான ஓர் பாவி என்பதை ஒத்துக்கொள்கிறேன். நீர் என்னுடைய தண்டனையை ஏற்றுக் கொண்டு, என்னுடைய பாவங்களுக்காக மரித்து, மரணத்திற்குப் பின்பு கல்லறையிலிருந்து உயிரோடு எழுந்து வந்ததற்காக, நான் உமக்கு மிகுந்த நன்றி சொல்கிறேன். நான் மெய்யாகவே என் பாவ ஜீவியத்தின் வழியை விட்டு விட விரும்புகிறேன். ஆண்டவராகிய இயேசுவே, நீர் என்னுடைய இருதயத்திற்குள் வந்து என்னையும் தேவனுடைய பிள்ளையாக மாற்றும். என் கடந்த ஜீவியத்தின் பாவங்களை என்னை விட்டு முற்றிலுமாய் அகற்றிவிட்டு, இன்றிலிருந்து நான் ஓர் புதிய வாழ்க்கையைத் துவங்க எனக்கு உதவி செய்யும். என்னுடைய எஞ்சியுள்ள ஜீவிய காலமெல்லாம் உம்முடைய புகழுக்காகவே வாழும்படி உமது வல்லமையை எனக்குத்தாரும். என் ஜெபத்தை இப்போது நீர் கேட்டதற்காக மிகவும் நன்றி."

ஆம், இன்று நீங்கள் எடுத்த இந்த தீர்மானமே, நீங்கள் உங்கள் வாழ்வில் இதுவரை எடுத்த எந்த தீர்மானத்தைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் நிறைந்ததாகும்.

தேவன் உங்களை மட்டில்லாது ஆசீர்வதிப்பாராக!

சகரியா பூணன் எழுதிய 'AMAZING FACTS' (வியப்பூட்டும் உண்மைகள்) என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்து

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்

http://www.cfcindia.com/tamil/