சனி, 24 ஏப்ரல், 2010

இதுவே மெய்யான சத்தியம் 3. மனசாட்சியைப் பற்றிய மெய்யான சத்தியம்

நாம் யாவரும் ஓர் மனசாட்சியுடன் சிருஶ்டிக்கப்பட்டிருக்கிறோம். நாம் குணாதிசயம் படைத்தவர்கள் என்பதை இந்த மனசாட்சிதான் நம்மை எப்போதும் நினைவுறுத்துவதாய் இருக்கிறது. இந்த மனசாட்சி நமக்குள் தேவனுடைய சத்தமாய் இருந்து, "நம் ஒவ்வொரு செயலுக்கும் நாமே பொருப்பாளிகள்" எனப் பேசுகிறது. ஆகவே, நாம் வாழ்ந்த முழு ஜீவியத்தைக் குறித்தும் ஒருநாளில் நாம் தேவனுக்கு கணக்கு ஒப்புவித்தே தீர வேண்டும்!

மனசாட்சி ஏதுமில்லாத மிருகங்களைப் போல் நாம் இல்லை. அவைகள் குணாதிசயம் கொண்டவைகளாய் இராதபடியால் யாதொன்றைக்குறித்தும் தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவைகளுக்கு எல்லாமுமாய் இருக்கிறது. அவைகள் மரித்தவுடன் மரணமே அவைகளுக்கு முற்றுப் புள்ளியாய் முடிகிறது. ஆனால் நமக்கோ இதுப்போன்ற நிலை இல்லை. மனிதன் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டு ஓர் நித்தியவாசியாய் இருக்கிறான்.

நமக்கு கடைசிநாளின் நியாயந்தீர்ப்பு என ஒன்று இருக்கிறது. அச்சமயம் நம் வாழ்வில் நாம் செய்த பேசிய, சிந்தித்த யாவும் நம் நினைவிற்கு மீண்டுமாய் கொண்டுவரப்படும். அன்று நம் முழு ஜீவியமும் தேவனால் கணக்கு பார்க்கப்படும். பின்பு அவர் வேதாகமத்தில் சொல்லப்பட்ட தம்முடைய பரிசுத்த பிரமாணங்களின் தரத்தின்படி நம்மை நியாயந்தீர்ப்பார் அவ்வேளையில் நம் ஒவ்வொரு சிந்தை, வார்த்தை மற்றும் செயலுக்காகவும் தேவனிடம் பதில் சொல்லியாகவேண்டும்!

"ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனுஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது" என வேதாகமம் கூறுகிறது.

‘மனசாட்சி’ தேவன் மனிதனுக்கு வழங்கிய ஒரு ஒப்பற்ற வரமாகும். இந்த வரம் நம்முடைய சரீரத்தில் நாம் பெற்றிருக்கும் "வலி" என்ற வரத்திற்கு ஒப்பாகும். நம் சரீரத்தில் நோய் உண்டாவதை அறிவிக்கும் "முதல் சிக்னலாய்" வலி இருக்கிறது!

குஷ்டரோகிகளிடம் உள்ள பிரச்சனைகளில் முக்கியமானதொன்று என்னவெனில் அவர்களுக்கு வலி இல்லாது இருப்பதுதான். குஷ்டரோகம் நரம்புகளைக் கொன்றுவலிக்குரிய எல்லா உணர்ச்சிகளையும் அழித்துவிடுகிறது. ஒரு குஷ்டரோகியின் பாதத்தில் ஒரு ஆணி குத்தினால்கூட அதை அவன் பல நாட்கள் அறியாதிருப்பான். ஆனால் அவனுடைய பாதமோ சீழ் பிடித்துவிடும். "வலி என்ற ஆசிர்வாதம்" அவனிடம் இல்லாததே காரணமாகும்.

இந்த வலிக்கொப்பாகவே மனசாட்சி இருக்கிறது. நாம் தேவனுடைய பிரமாணங்களை மீறும் போதும், பாவசிந்தனை கொள்ளும்போதும், அல்லது பாவத்தை செய்த பின்பும் இந்த மனசாட்சி நம்மை எச்சரிக்கிறது. இந்த எச்சரிப்புகளை நாம் அலட்சியம் செய்யவோ அல்லது அதை மீறியோ நடந்தால், நாம் கொஞ்சம் கொஞ்சமாய் நமக்குள் இருக்கும் பாவ உணர்வை கொன்றுவிடுவோம். இதுபோன்ற வாழ்க்கையின் முடிவு, நித்திய நித்திய காலமாய் தேவனால் தண்டிக்கப்படுவதே ஆகும்.

இயேசு இந்த மனசாட்சியை "கண்ணிற்கு" ஒப்பிட்டார். நம் கண்ணில் ஒரு சிறிய தூசி விழுந்தாலும், கண் உறுத்தல் உண்டாகி அத் தூசியை நம் கண்ணிலிருந்து நாம் அகற்றும்வரை நம்முடைய எல்லா வேலைகளையும் நிறுத்திவிடுகிறது. இக்கண்ணிற்கு ஒப்பாகவே நம் மனசாட்சியை எப்போதும் சுத்தமுள்ளதாய் நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

நம்முடைய பாவங்கள் தேவனால் மாத்திரமே மன்னிக்கப்பட்டு கழுவப்பட முடியும். நாம் ஏற்கனவே நம் மனசாட்சியில் சுமந்து கொண்டிருக்கும் குற்ற உணர்வை அகற்றுவதற்கு அது ஒன்றே வழியாகும்.

ஆனால், இந்தப் பாவமன்னிப்பு இன்று அநேகர் எண்ணுவதுபோல் மலிவானதொன்றல்ல!

அடுத்த அத்தியாயம்

இந்த கட்டுரை சகரியா பூணன் எழுதிய "THE REAL TRUTH" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்

www.cfcindia.com/tamil/

கருத்துகள் இல்லை: