சனி, 24 ஏப்ரல், 2010

இதுவே மெய்யான சத்தியம் 2. பாவத்தைப் பற்றிய மெய்யான சத்தியம்

ஒரு மிருகம் எவைகளைக் குறித்து ஆர்வமாய் இருக்கும்? உணவு, உறக்கம், காமதிருப்தி.... அவ்வளவுதான்! இவைகளில் மாத்திரமே ஒரு மானிடனும் ஆர்வம் கொண்டிருந்தால், அவனும் மிருகங்களின் தரத்திற்கு இறங்கி வந்துவிட்டான் என்றே நாம் சொல்லலாம். ஆனால், மனிதன் மிருகங்களைப்போல் இருப்பதற்காக தேவன் அவனை சிருஷ்டிக்கவில்லை. நாம் அவரைப்போல் சீரிய பண்புகளும், நேர்மையுள்ளமும், நற்குணங்களும், சுயகட்டுப்பாடும் கொண்டவர்களும் இருப்பதற்கு நம்மை சிருஷ்டித்தாரே அல்லாமல்.... மிருக உணர்வுகளுக்கு அடிமையாக இருப்பதற்கு அல்ல!!

நாம் மிருகங்களைவிட அறிவுக்கூர்மையும் கல்வி கற்றவர்களாயும் இருப்பதினிமித்தம் மிருகங்களைக் காட்டிலும் நம்மை மேலானவர்களாகக் கருதிவிட முடியாது! ஏனெனில் புத்திக்கூர்மையான கல்வி கற்ற மனிதர்கள், இன்னமும் பேராசைக்கும், சுயநலத்திற்கும், காம இச்சைக்கும், கோபத்திற்கும் அடிமையாகத்தான் இருக்கின்றார்கள்!!

நம் மனதைக் காட்டிலும் ஆழமான ஒரு பகுதி நமக்குள் அடங்கி இருக்கிறது. அது நமக்குள் இருக்கும் ஆவி! நம்முடைய ‘ஆவியே’ தேவனைக் குறித்த உணர்வை நமக்குத் தருகிறது. இந்த உணர்வு எந்த ஒரு மிருகத்திற்கும் இல்லை.

சுயதீனமாய் தெரிந்துக்கொள்ளும் சுதந்திரத்தினிமித்தம் ஏற்படும் அபாயம் யாதெனில், இந்த சுதந்திரத்தை வைத்து நம்மை நாமே பிரியப்படுத்துவதற்கும், தேவனுடைய பிரமாணங்களுக்கு கீழ்படியாமல் இருப்பதற்கும் பயன்படுத்திவிட முடியும். இவ்வாறு இருந்த போதும் தேவன் இந்த விபரீதத்தைச் சந்திக்கத் தயாராயிருந்தார். ஏனென்றால், தேவனாகிய தன்னை சுயாதீனமாய் தெரிந்துகொள்ளும் பிள்ளைகளையே அவர் விரும்புகின்றார்!!

தேவன் சிருஷ்டித்த முதல் மனுஷ்னும் மனுஷியும் ஆதாம் என்றும் ஏவாள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சிருஷ்டிக்கப்பட்டபோது "களங்கம் அற்றவர்களாகவே" இருந்தார்கள். ஆனால் அவர்கள் பரிசுத்தமாய் இருப்பகற்கோ, அதை அவர்கள் தாங்களாகவே தெரிந்துக்கொள்ள வேண்டும்! இந்தத் தெரிந்துகொள்ளுதல் ஏற்படுவதற்காகத்தான் அவர்கள் சோதிக்கப்பட வேண்டியிருந்தது. ஏனெனில் அப்போது மாத்திரமே அவர்கள் ‘தீமையை மறுத்து’ தேவனைத் தெரிந்துகொள்ள முடியும். இதற்காகவே சாத்தான் அவர்களிடம் வந்து, அவர்களைச் சோதிப்பதற்கு தேவன் அனுமதித்தார்! இந்த நிகழ்ச்சியை வேதாகமத்தின் முதலாவது புத்தகமாகிய ஆதியாகமம் 2,3 அதிகாரங்களில் வாசிக்கிறோம்.

முதல் மனுஷனையும் மனுஷியையும் தேவன் சிருஷ்டித்தபோது, அவர்களை அவர் ஒரு தோட்டத்தில் வைத்து, ஒரே ஒரு மரத்தின் கனியைத் தவிர எல்லா மரத்தின் கனிகளையும் புசிக்கலாம் என தேவன் கூறினார். இதுவே அவர்களுக்குத் தரப்பட்ட தெரிந்துகொள்ளுதலின் பரீட்சையாக இருந்தது! இவ்வளவு மிக எளிய கீழ்ப்படிதலின் பரீட்சையில் ஆதாமும், ஏவாளும் தோல்வி அடைந்தார்கள்! எப்படியெனில், சாத்தான் அவர்கள் தோட்டத்திற்குள் பிரவேசித்து ஆதாமையும் ஏவாளையும் பார்த்து, "நீங்கள் இவ்விலக்கப்பட்ட கனியைப் புசிக்கும் நாளில் தேவனைப்போல் ஆகிவிடலாம்" எனக் கூறி சோதித்தான். அவ்வேளையில் ஆதாமும் ஏவாளும் சந்தித்த சோதனை, "ஏதோ ஒரு மரத்தின் கனியை புசிப்பதுதானே!" என்ற மிக எளிய சாதாரண விஷயமாய் இருக்காமல், "அவர்கள் விரும்பினால் தேவனைப்போல் மாறிவிடலாம்" என்பதான விபரீதமாய் இருந்தது!

ஒரு காலத்தில் ‘சாத்தான்’ இதுபோன்ற விருப்பத்தையே கொண்டிருந்தான். அந்த விருப்பத்தைத்தான் அவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் விஷம் பாய்ச்சிவிட்டான். இவர்கள் தேவனுக்குக் கீழ்படியாமல் போனதால், அன்று சாத்தான் அடைந்த அதே கதியை அடைந்தார்கள். ஆம், இவர்களும் தேவனுடைய சமூகத்தை விட்டு துரத்தப்பட்டார்கள்!
மேற்சொல்லப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளையும் பரிசுத்த வேதாகமத்தின் முதல் புத்தகமாகிய ஆதியாகமம் 3-ம் அதிகாரத்தில் நாம் தெளிவாக வாசித்தறியலாம்.

மனுவர்க்கத்திற்குள் எவ்வாறு பாவம் தோன்றியது என்பதை இப்போது நாம் தெளிவாக வாசித்தறியலாம்.

தேவனுக்கு மேலாக, நமக்கானவைகளையும் சிருஷ்டிக்கப்பட்டவைகளையும் தெரிந்துகொள்வதே எல்லாப் பாவத்திற்கும் வேராய் இருக்கிறது. அதாவது, தேவனுடைய வழிக்குப் பதிலாக நம் சொந்த வழியைத் தெரிந்துகொள்வதும், தேவனைப் பிரியப்படுத்துவதற்குப் பதிலாக நம்மை நாமே பிரியப்படுத்துவதுமாகும்!

விபச்சாரம் அல்லது கொலை அல்லது திருடுதல் போன்றவைகளைச் செய்வது மாத்திரம் பாவமாகாது. ஆம், பாவத்தின் சரியான விளக்கம் "நாம் நம்முடைய சொந்த வழியை விரும்புவதேயாகும்." பாவம் துவங்குவதை ஒரு சிறு பிள்ளையின் முரட்டாட்டத்திலிருந்து நாம் காண்கிறோம். அந்தப் பிள்ளை வளரும்போது தன் சொந்த வழியில் செல்லவே தீர்மானித்து... தான் விரும்பியதையெல்லாம் மற்ற பிள்ளைகளிடமிருந்து பறிக்கவும் சண்டையிடவும் செய்கிறது!!

பாவம் நம் ஒவ்வொரு நாடி நரம்புகளிலும் ஊடுறுவப் பாய்ந்திருக்கிறது. இப்பாவத்தை மார்க்க அனுசாரங்களைப் போன்ற உபவாசம் மற்றும் ஜெபங்களின் மூலமோ அல்லது புனிதயாத்திரையின் மூலமோ அல்லது சுயக்கட்டுப்பாட்டின் மூலமோ போக்கிவிட ஒருக்காலமும் முடியாது! தேவன் ஒருவரே நம்மை பாவத்திலிருந்து இரட்சிக்க முடியும்!!

ஆனால், "பாவம் இத்தனை தீமையானது" என நாம் உணரும்வரை தேவன் காத்திருக்க வேண்டியதாயிருக்கிறது. யாரெல்லாம் தங்களை நீதிமான்களாகக் கருதுகிறார்களோ அவர்களைத் தான் இரட்சிக்க முடியாது என்ற உண்மையை இயேசு தெளிவுபடுத்தினார். தாங்கள் நோயாளிகள் என்பதை அறிந்தவர்கள் மாத்திரமே ஒரு மருத்துவரிடம் செல்லுவார்கள். இதற்கொப்பாக "நாம் பாவிகள்" என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வதே நம்முடைய முதல் தேவையாயும் இருக்கிறது.

நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும், நாம் அனைவருமே பாவிகள்தான். நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய பரிசுத்த பிரமாணங்களை நம்முடைய சிந்தையிலும், வார்த்தையிலும், செயலிலும், மனநோக்கங்களிலும் மீறி பாவம் செய்திருக்கிறோம். ஆம், நாம் தேவனுடைய பரிசுத்த தரத்திலிருந்து வீழ்ச்சி அடைந்துவிட்டோம்.

எய்ட்ஸ் நோயைக் காட்டிலும் பாவம் கொடியதாகும். ஒரே ஒரு வித்தியாசமாக இருப்பதெல்லாம் பாவம் நம்முடைய "ஆத்துமாவிற்கு" அழிவைத் தருகிறபடியால் அந்த அழிவை வெளிப்படையாய் காணமுடிவதில்லை, அவ்வளவுதான்! பாவத்தினால் ஏற்படும் விளைவுகள் எய்ட்ஸ் நோயின் விளைவுகளைக் காட்டிலும் மோசமானதாகும். அது நம் ஜீவியத்தை நாசம் செய்து இப்பூமியில் நம்மை மகிழ்ச்சியற்றவர்களாகச் செய்கிறது. இக்கொடிய பாவத்திலிருந்து நாம் இரட்சிக்கப்படாத பட்சத்தில் பாவம் நம்மை முடிவில் நித்தியத்திலும் அழித்துவிடுகிறது!

அடுத்த அத்தியாயம் 

இந்த கட்டுரை சகரியா பூணன் எழுதிய "THE REAL TRUTH" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்

www.cfcindia.com/tamil/

கருத்துகள் இல்லை: